கல்வி உதவித் தொகை உயர்வு… ஆனா இவங்களுக்கு மட்டும் : முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan4 August 2023, 7:27 pm
காவலர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்படி 100 மாணவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கை உயர்த்தப்பட்டு 200 மாணவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும், காவலர்களின் குழந்தைகளுக்கு கல்விப் பரிசுகள் வழங்கும் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் பரிசுத் தொகை இரட்டிப்பாக்கப்படும் என்றும் 2023-24ம் ஆண்டிற்கான காவல்துறை மானியக் கோரிக்கையின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், காவலர்களின் குடும்பத்தைச் சார்ந்த 200 மாணவர்களுக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் வீதம் 4 வருடங்களுக்கு மொத்தம் ரூ.24 கோடியில் சிறப்பு கல்வி உதவித் தொகை வழங்கவும், 37 காவல் மாவட்டங்கள் மற்றும் 9 காவல் ஆணையரகங்களில் பணிபுரியும் காவலர்களின் குழந்தைகளுக்கு கல்விப் பரிசுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முறையே முதல் பத்து இடங்களைப் பெறும் 400 மாணவ, மாணவியர்களுக்கு தற்போது வழங்கப்படும் மொத்த கல்விப் பரிசுத்தொகையை ரூ.28,29,000/-ல் இருந்து ரூ.56,58,000/-ஆக இரட்டிப்பாக்கி கல்விப்பரிசுகள் வழங்கவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
உயர்த்தப்பட்ட சிறப்பு கல்வி உதவித்தொகை மற்றும் கல்விப்பரிசுகள் வழங்குவதால் ஏற்படும் கூடுதல் செலவினத்திற்காக, தமிழ்நாடு காவலர் நல நிதிக்கு அரசால் தற்போது வழங்கப்பட்டு வரும் மானியத் தொகையினை ரூ.1.2 கோடியிலிருந்து ரூ.2.96.58,000/- ஆக உயர்த்தியும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.