கோவையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 123 ஆக உயர்வு: கவனமுடன் இருக்க மக்களுக்கு அறிவுறுத்தல்..!!
Author: Rajesh27 January 2022, 4:49 pm
கோவை: கோவை மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்து உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஒமைக்ரான் வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. கோவை மாவட்டத்தில் தினசரி 3 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் மாநகராட்சியை விட ஊரக பகுதிகளில் அதிகமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இதுகுறித்து சுகாதார துறையினர் கூறியதாவது, கோவை மாவட்டத்தில் தினமும் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில் 3 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரத்து 800 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. மாநகராட்சியை விட ஊரக பகுதிகளில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. குறிப்பாக சூலூர், மதுக்கரை பகுதிகளில் பாதிப்புகள் அதிகமாக கண்டறியப்பட்டு உள்ளது.
தற்போது அன்னூர், தொண்டாமுத்தூர், காரமடை பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை தீவிரமாக கண்காணித்து வருகின்றோம். கோவை மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 23 இடங்களிலும், ஊரக பகுதிகளில் 123 இடங்களிலும் கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.
ஊரக பகுதிகளில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று சளி, காய்ச்சல் பாதிப்பு கண்டறியும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் மேற்கு மண்டலத்தில் மட்டுமே பாதிப்பு அதிகாக உள்ளது. மத்திய மற்றும் வடக்கு மண்டலத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.