போலி தங்க காசுகளை ஓட்டுக்களாக மாற்றிய தில்லாலங்கடி ‘சுயேட்சை’.. 2 நாட்களுக்கு பின் வெளியான உண்மையால் வாக்காளர்கள் அதிர்ச்சி!!
Author: Babu Lakshmanan21 February 2022, 6:43 pm
ஆம்பூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வழங்கிய தங்க நாணயத்தை அடகு கடையில் பரிசோதித்தபோது, அது பித்தளை என தெரிய வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளுக்கான கவுன்சிலர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 36-வது வார்டுக்குட்பட்ட கம்பிகொல்லை பகுதியில் மணிமேகலை துரைப்பாண்டி என்பவர் சுயேட்சை வேட்பாளராக தென்னை மர சின்னத்தில் போட்டியிட்டார்.
இந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான பிப்.18ஆம் தேதி அன்று நள்ளிரவு மணிமேகலை மற்றும் அவரது கணவர் துரைப்பாண்டி ஆகியோர், அந்த பகுதியில் வீடு வீடாக சென்று தங்க நாணயம் ஒன்றை வழங்கி, தங்களுக்கு வாக்களிக்கும்படி கேட்டுள்ளார்.
மேலும், ஓம்சக்தி உருவம் பொறித்த அந்த நாணயத்தை, 3 நாட்கள் கழித்து பார்க்கும் படியும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் பிரச்சினையாகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அந்த பகுதி பொதுமக்கள், மறுநாள் காலை அடகு கடைக்கு சென்று காண்பித்தபோது, அது பித்தளை என தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் பித்தளை நாணயத்தை கொடுத்து தங்களை ஏமாற்றியதாக சுயேட்சை வேட்பாளர் மீது புகார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பித்தளை நாணயத்தை வழங்கி மோசடி செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.