கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்திய பக்தர்கள் பங்கேற்க மாட்டோம்… 3,500 பக்தர்கள் எடுத்த அதிரடி முடிவு!
Author: Udayachandran RadhaKrishnan21 பிப்ரவரி 2024, 1:29 மணி
கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் இந்திய பக்தர்கள் பங்கேற்க மாட்டோம்… 3,500 பக்தர்கள் எடுத்த அதிரடி முடிவு!
இலங்கை இந்தியா இருநாட்டு மீனவர்களின் நல்லுறவை ஏற்படுத்தும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்தது இத்திருவிழாவில் இந்திய தரப்பிலிருந்து 3500 பக்தர்களும் இலங்கை தரப்பிலிருந்து நான்காயிரம் பக்தர்களும் கலந்து கொள்ள உள்ளதாக இருநாட்டு அரசாங்கமும் தெரிவித்து இருந்த நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலி காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் தொடர்ந்து ஐந்தாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையிலும் நேற்றைய தினம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்களை விடுவிக்க கோரி உள்ளிட்ட கோரிக்கைகளின் அடிப்படையில் நடைபயண போராட்டம் நடைபெற்றது.
போராட்டம் விவரம் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து மீனவர்களுடன் சமாதானம் பேச்சுவார்த்தை நடைபெற்ற சூழ்நிலையில் மீனவர்களின் நடை பயண போராட்டம் மட்டும் ரத்து செய்யப்பட்டு மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்பொழுது தொடர்கிறது
போராட்டத்தின் எதிரொலி காரணமாக இலங்கையில் நடைபெற உள்ள கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு இந்திய தரப்பிலிருந்து சுமார் 3500 பேர் கலந்து கொள்வார்கள் என ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் மீனவர்களின் போராட்டம் எதிரொலி காரணமாக பங்கேற்கவில்லை என ராமேஸ்வரம் வேர்க்கோடு பங்குத்தந்தை சந்தியாகு தற்போது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல பணம் கட்டிய நபர்களின் தொகை மீண்டும் வழங்கப்படும் எனவும் வெளி மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்து பதிவு செய்த நபர்கள் வீண் அலைச்சலை தவிர்க்க வேண்டும் எனவும் வேர்க்கோடு பங்குத்தந்தை தற்போது செய்தி குறிப்பாக தெரிவித்துள்ளார்.
0
0