இந்தி மட்டும்தான் தெரியும்.. சூப்பில் மிதந்த பூச்சி.. கோவை ஹோட்டலில் பரபரப்பு!
Author: Hariharasudhan22 February 2025, 12:57 pm
கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆர்டர் செய்த சூப்பில் பூச்சிகள் மிதந்ததற்கு உணவகம் தரப்பில் அலட்சியமாக பதில் தரப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர், அப்பகுதியில் உள்ள பிரபல உணவகத்தில், சிக்கன் வான்டன் சூப்பை ஆன்லைன் உணவு ஆர்டர் செய்யும் செயலி மூலம் ஆர்டர் செய்து உள்ளார். பின்னர், அந்த சூப்பை அவரது மூன்று வயது குழந்தைக்கு கொடுத்துள்ளார்.
பின்னர், பாதி சூப் சாப்பிட்ட பிறகு, அதில் பூச்சிகள் மிதந்துள்ளது. இதனைக் கண்ட கார்த்திகேயன் பெரும் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, ஆன்லைன் ஆர்டர் செயலி மற்றும் உணவகத்திடம் புகார் அளித்துள்ளார். முதலில், ஆன்லைன் செயலி தரப்பில் உணவுத் தரத்திற்கு நாங்கள் பொறுப்பல்ல எனக் கூறி முடித்துள்ளனர்.
அதேபோல், உணவகத்தினர் எந்தப் பதிலும் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து பாதிக்கப்பட்ட கார்த்திகேயன் கூறுகையில், “சுங்கம் பகுதியில் உள்ள சைனா வேலி ரெஸ்டாரண்டில் ஸ்விகி மூலம் சூப் ஆர்டர் செய்தேன். அதனை நானும், அவரது 3 வயது மகளும் பாதி அருந்திவிட்டு பார்த்தபோது தான், அதில் சிறிய அளவிலான நூற்றுக்கும் மேற்பட்ட பூச்சிகள் மிதந்தது தெரிந்தது.
பின்னர், இதுகுறித்து ஸ்விகியிடம் புகார் தெரிவித்தபோது, அவர்கள் டெலிவரி பார்ட்னர் மட்டும் தான் எனக் கூறிவிட்டு உணவகத்தை தொடர்பு கொள்ளக் கூறினர். அந்த சைனா வேலி உணவக அதிகாரிகள் எதுவும் கூறாமல், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் இந்தியைத் தவிர வேறு எதுவும் தெரியாது எனக் கூறி மெத்தனமாக பதில் அளித்தனர். சரியான பதில் கூட கூறவில்லை.
இதையும் படிங்க: கம்பளம் விரித்தாரா விஜய்? இன்று மாலை அறிவிக்கும் காளியம்மாள்!
அதேநேரம், அதன் மேலாளர், வாண்டன் சூப்பில் உங்களுக்கு ஏதோ பிரச்னை இருந்ததாக நீங்கள் ஹைலைட் செய்து உள்ளீர்கள் எனக் கேட்டு உள்ளனர். அந்த சூப்பில் இருந்த பிரோகாலியில் இருந்து அந்தப் பூச்சி வந்து இருக்கலாம் எனவும், இதைப் பற்றி புகார் அளிக்க இருப்பதாகவும் கூறினார்.