மதுரை திமுகவில் உட்கட்சி பூசல்… சொந்தக் கட்சி நிர்வாகி மீது வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் ; திமுக வட்டச்செயலாளரின் மகன் கைது..!!
Author: Babu Lakshmanan14 March 2023, 11:09 am
மதுரை : திமுக நிர்வாகியின் குடும்பத்தினரை வீடு தேடி சென்று கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக வட்டச் செயலாளரின் மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகராட்சி 73வது வார்டுக்கு உட்பட்ட முத்துப்பட்டி RMS காலனி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் திமுகவுடைய பொறியாளர் அணியின் அமைப்பாளராக பதவியில் உள்ளார். இந்த நிலையில், 73 ஆவது வட்டச் செயலாளர் விஜயசேகர் மற்றும் அவருடைய மகன் விஜய்பாபு உள்ளிட்டோர் இடையே உட்கட்சி பூசல் இருந்து வந்தது.
மதுரை மாநகராட்சி மாமன்ற தேர்தலின்போது, 73வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட விஜயசேகர் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அந்த வார்டு பகுதியானது காங்கிரஸுக்கு வழங்கப்பட்டு, தற்போது காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து வருகிறார்.
73ஆவது வார்டு பகுதியை திமுகவிற்கு கொடுக்க விடாமல் காங்கிரசுக்கு கொடுக்க வைத்ததாக மணிகண்டன் மீது தொடர்ச்சியாக திமுக வட்டச் செயலாளர் விஜய்பாபு மோதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் இதன் உச்சகட்டமாக நேற்று மாலை வீட்டில் குடும்பத்தினருடன் மணிகண்டன் இருந்தபோது, திடீரென வீட்டிற்கு வந்த வட்டச் செயலாளர் மகன் விஜயபாபு மற்றும் அவரது நண்பர்கள் சரமாரியாக மணிகண்டனை தாக்கியுள்ளனர்.
அப்பொழுது, மணிகண்டனின் குடும்பத்தினர் கதவை அடைத்து தப்பிக்க முயன்ற நிலையிலும், கதவை உடைத்து கொண்டு வட்டச் செயலாளரின் மகன் உள்ளிட்டோர் திமுக நிர்வாகியான மணிகண்டனின் குடும்பத்தினரை தாக்க முயற்சித்தனர்.
இதனையடுத்து, சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க மணிகண்டன், அவரது மனைவியுடன் சென்றபோது, வழிமறித்த திமுக வட்ட செயலாளரின் மகன் உள்ளிட்டோர் திமுக நிர்வாகியான மணிகண்டன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி, அவருக்கு காயம் ஏற்படுத்தியதோடு, அவரது பைக்கையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திமுக வட்டச் செயலாளரின் மகனான விஜய்பாபுவை கைது செய்ததோடு, திமுக வட்டச் செயலாளர் விஜய சேகர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். திமுக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக, திமுக நிர்வாகியவே வீடு தேடி சென்று கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவமானது திமுக அரசின் சட்ட ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.
சொந்த கட்சியினருக்கு சொந்த கட்சியினரால் அச்சுறுத்தல் நிலவும் வகையில், உரிய பாதுகாப்பு அளிக்க முடியாத சூழலில் உள்ளதை தான் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.