மின் வாரிய ஊழியர்களை பணி செய்ய விடாமல் மிரட்டல் : தடுக்க வந்தவர்களை ஆபாசமாக திட்டிய திமுக நகராட்சி துணை தலைவரின் கணவர்!!
Author: Udayachandran RadhaKrishnan4 May 2022, 5:50 pm
திருப்பூர் : காங்கேயம் திமுக நகராட்சி துணைத் தலைவரின் கணவர் மதுபோதையில் ரகளை செய்ததால் மின் கம்பம் நட வந்த மின்வாரிய ஊழியர்கள் தற்காலிகமாக மின் கம்பத்தை நட்டுவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கேயம் நகராட்சியில் 16-வது வார்டு கவுன்சிலராக உள்ளவர் திமுகவைச் சேர்ந்த கமலவேணி. இவர் காங்கேயம் நகராட்சியில் துணைத் தலைவராகவும் உள்ளார்.
இவரது கணவர் ரத்தினகுமார் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். மேலும் தனது மனைவியின் அரசியல் பணிகளையும் கவனித்து வருகிறார். இந்நிலையில் நேற்று தாராபுரம் ரோட்டில் உள்ள மோர்க்காரர் வீதியில் மின்கம்பம் ஒன்று நட வேண்டி உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்த நிலையில் நேற்று மின் கம்பம் நட மின்வாரிய ஊழியர்கள் வந்து உள்ளனர். துணைத் தலைவரின் கணவர் ரத்தினகுமார் அங்கு வந்து அந்த இடத்தில் மின்கம்பம் நடக் கூடாது என குடிபோதையில் தகராறு செய்துள்ளார்.
மேலும் அங்குள்ள பொதுமக்களிடம் கெட்ட வார்த்தையில் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இது அங்கிருந்த பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மின்கம்பம் நட வந்த ஊழியர்கள் காங்கேயம் நகராட்சிதுணை தலைவரின் கணவர் மிரட்டும் செயலளால் மின்கம்பத்தை முறையாக கான்கிரீட் போட்டு மின்கம்பத்தை நாடாமல் 4 அடி குளிபாறைத்து மண் மற்றும் ஜல்லி கற்களை கொண்டு ஒப்புக்கு பணியை முடித்து விட்டு சென்றனர்.
இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு நட்ட மின் கம்பம் மீண்டும் கீழே விழுவதற்கு வாய்ப்புள்ளது என அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இன்று வரை அந்த கம்பத்தில் இருந்து மின் இணைப்பு கொடுக்கவே இல்லை என்கின்றனர்.
ஏற்கனவே திமுகவின் பெண் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கணவர்கள் அரசியல் பணிகளில் செயல்படுவது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குடிபோதையில் ரகளை செய்த காங்கேயம் நகராட்சித் துணைத் தலைவரின் கணவர் செயலால் திமுகவினருக்கு மேலும் கெட்டபெயர் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
திமுக கட்சியினர் இதுபோன்ற செயல்களை செய்யாமல் இருக்க கட்சி தலைமை மேலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.