‘திமுகவினர் வாக்குறுதி கொடுத்தாங்க… நம்பி ஓட்டு போட்டோம்’… அரைகுறையாக கட்டப்பட்ட வீடுகள்.. தவிக்கும் இருளர் மக்கள் குமுறல்!!

Author: Babu Lakshmanan
19 June 2023, 9:40 pm

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உடன் அரைகுறையாக கட்டப்பட்ட இருளர் சமுதாயத்தினரின் வீடுகள் அனைத்தும் முழுமைப் படுத்தி தரப்படும் என வாக்குறுதியளித்த திமுகவினர் இது நாள் வரை எட்டிக் கூட பார்க்கவில்லை என இருளர் சமுதாய மக்கள் குமுறி வருகின்றனர்.

பழங்குடியினர் என இந்திய அரசால் அடையாளப்படுத்தப்பட்ட இருளர் சமுதாயத்தினர் காடு சார்ந்த வாழ்வியலுக்கு பழக்கப்பட்டவர்கள். குறிப்பாக பாம்பு, எலி போன்றவற்றை பிடிப்பதில் கைதேந்தவர்கள். இவர்களின் சமுதாயப் படிநிலை மிகவும் தாழ்த்தப்பட்ட ஒன்றாகதான் இது நாள் வரை நீடித்து வருகின்றது.

‘6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக கல்வி அளிப்பது அரசின் கடமை. இருளர் சமுதாய மக்களுக்கு அடிப்படை உரிமையான கல்வியும், அடிப்படை வசதிகளும் எப்போதும் எட்டாக்கனியாக்கத்தான் இருக்கிறது. ‘இருளர்’ பழங்குடியின மக்களின் வாழ்க்கை, அவர்களின் பெயர்களுக்கு ஏற்றார்போல இருளாகவே இருக்கிறது. விடியல் ஆட்சியில் இன்னும் அவர்களுக்கு விடியலே கிடைக்கவில்லை.

ஒரு மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் அத்தியாவசியம் என அரசியலமைப்பு சொல்கிறது. ஆனால், இருளர் இன மக்கள் ஆண்டாண்டுகாலமாக நிரந்தர வீடுகள் மற்றும் வீட்டு பட்டாக்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர். இது சமூகத்தின் மற்றொரு அவலமாகும். 2023 ஆம் நூற்றாண்டில் கூட பனை ஓலைகளாலான தற்காலிக கூடாரங்களில் வசித்து வரும் அவர்களுக்கு முறையான மின்சாரம், குடிநீர், கழிப்பறை ஆகிய அடிப்படை வசதிகள் கிடைப்பதில்லை.

வேலை வாய்ப்புகள், வீடுகள், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காத காரணத்தால்தான் அம்மக்கள் நாடோடிகளாக இடம் பெயர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். அம்மக்களுக்கு ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வாக்களிக்கும் முகாந்திரம் இருந்தால் மட்டுமே அரசியல் கட்சிகள் அவர்களை கண்டுகொள்கின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் புஞ்சை அரசந்தாங்கள் ஊராட்சியில் கடந்த 2015/ 16 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 9 இருளர் சமுதாய மக்களுக்கு வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்டு பட்டாக்கள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு வீடுகளும் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

விச்சந்தாங்கள் பகுதியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வந்த லோகநாதன் என்பவர் ஒன்பது வீடுகளையும், தானே கட்டித் தருவதாக கூறி, இருளர் சமுதாய மக்களிடம் பணத்தை பெற்றுக் கொண்டு அரைகுறையாக வீடுகளை கட்டி முடித்து விட்டு பக்கத்து கிராமத்திற்கு பணியிடை மாற்றத்தில் சென்று விட்டார். இருளர் சமுதாய மக்களுக்கு படிப்பறிவு ஏதும் இல்லாத காரணத்தினால், லோகநாதன் எவ்வளவு பணம் வாங்கினார், எவ்வளவு செலவு செய்தார், எவ்வளவு ஏமாற்றினார் என ஒன்றுமே தெரியாமல் இருளர் மக்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலின் போது, இந்த 9 வீடுகளுக்கும் மின்சாரம், படிக்கட்டு, கதவு, ஜன்னல், கழிப்பறைகள் மற்றும் பூச்சு வேலைகள் என நாங்கள் அனைத்தையும் செய்து தருவோம், எங்களுக்கு வாக்குகளை அளியுங்கள் என திமுகவினர் வாக்குறுதி அளித்தனர்.

திமுகவினர் கொடுத்த வாக்குறுதிகளை நம்பி எங்களின் 31 வாக்குகளையும் அளித்தோம். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இந்த நிமிடம் வரை எங்களை வந்து பார்க்கவில்லை. என்ன, ஏது என கேட்கவில்லை. எங்கள் வீடுகளுக்கு படிக்கட்டு, கதவு, ஜன்னல், தெரு விளக்கு செய்து கொடுங்கள் எனக் கேட்டால், திமுகவை சேர்ந்த ஆட்கள் எங்களை வந்து திட்டுவார்கள், அடிப்பர்கள். எனவே, எங்கள் குறைகளை யாரிடமும் எடுத்துக் கூற முடியவில்லை என அச்சத்துடன் இருளர் மக்கள் பேசினார்கள்.

நமது தொலைக்காட்சி செய்தியாளர் அந்தப் பகுதி மக்களிடம் பேட்டி எடுக்கும்போது, திமுக கட்சியை சேர்ந்த இளைஞர்கள் பேட்டி எடுக்க கூடாது என நம்மை மிரட்டி எச்சரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் ஓரிரு மாதங்களில் மழைக்காலம் தொடங்க உள்ளது. வீட்டின் மேற்கூரை, படிக்கட்டு, ஜன்னல், கதவு, கழிவறை, மின்விளக்கு போன்ற எந்த வசதியும் இல்லாத காரணத்தினால் பிள்ளைகளையும் பள்ளி கூடத்திற்கு படிக்க அனுப்புவது இல்லை. எங்கள் பிரச்சனைகள் எப்போது தீருமோ என தெரியவில்லை என மன வருத்தத்துடன் கூறினார்கள்.

செங்கல் சூளைக்கும், மரங்கள் வெட்டுவதுக்கும், அரிசி ஆலையின் வேலைகளுக்கும் தினக்கூலியாக செல்லுகின்ற இந்த இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையில் விடிவுகாலம் என்பதே இல்லையா? மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே இந்த வீடுகளை முழுமைப்படுத்தி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதேபோல் வீடுகளை முழுமைப்படுத்தி தராத ஊராட்சி செயலர் லோகநாதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 420

    0

    0