மகளிர் சட்ட மசோதாவில் பாஜக அரசியல் செய்கிறதா? அதை சொல்ல திமுகவுக்கு தகுதியில்லை : வானதி சீனிவாசன் அட்டாக்!!
Author: Udayachandran RadhaKrishnan20 September 2023, 2:41 pm
மகளிர் சட்ட மசோதாவில் பாஜக அரசியல் செய்கிறதா? அதை சொல்ல திமுகவுக்கு தகுதியில்லை : வானதி சீனிவாசன் அட்டாக்!!
கோவை காந்திபுரம் பகுதியில் தெற்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய பேருந்து நிறுத்த நிழற்குடை கட்டுமான பணிகளுக்கான பூஜை நடைபெற்றது.
இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பில் 5 புதிய பேருந்து நிறுத்த நிழற்குடைகள் மற்றும் ஒரு அங்கன்வாடி மையம் அமைக்கப்பட உள்ளது என்றும் தொகுதி மக்களின் கருத்துகளை கேட்டு அவர்களின் அவசியங்கள் தொகுதி நிதியில் இருந்து நிறைவேற்றப்படும் என்றார்.
மேலும் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவை ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் எனவும் இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளது, அதிகமான பெண் உறுப்பினர்கள் வரும் போது பெண்கள் பிரச்சனைகள் அவர்களின் பார்வையில் இருந்து தீர்வு காணப்படும் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதற்காக திமுக அந்த தீர்மானத்தை நிறைவேற்றியது? எந்த வாக்கு வங்கிக்காக நிறைவேற்றியது? பாஜகவை விமர்சிக்கும் திமுகவின் உண்மையான முகம் எது? பாஜக கட்சிக்குள்ளேயே 33 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றுகிறது எனவும் தெரிவித்தார்.
திமுக மந்திரி சபையில் பெண்களுக்கு முதல் வரிசையில் இடமில்லை என கூறிய அவர் பாஜகவில் பெண்களுக்கு முதல் வரிசையில் இடமளிக்கப்படுகிறது எனவும் கூறினார்.
இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் பாஜக அரசியல் செய்கிறது என சொல்ல திமுகவிற்கு எந்த தகுதியும் இல்லை எனவும் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் எனவும் கூட்டணி குறித்து தேசிய தலைமை தகுந்த நேரத்தில் சரியான முடிவு எடுக்கும் எனவும் எங்களது கருத்துகளை கட்சி மேலிடத்திற்கு சொல்வோம் என கூறிய அவர், அதை ஊடகங்கள் வாயிலாக சொல்வது முறையல்ல என்றார்.
ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் தனித்தனி சித்தாந்தம், கொள்கை இருக்கும், கூட்டணிக்காக மற்றொரு கட்சியின் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது, கூட்டணிக்குள் சலசலப்பு வந்தாலும் சரி செய்யப்படும் என்றார்.
மேலும் என் மண், என் மக்கள் யாத்திரை எல்லா இடத்திலும் சிறப்பாக நடக்கிறது என கூறிய அவர், அனைத்து இடங்களிலும் மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
கோவையில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, “எந்த தலைவர் சிலையாக இருந்தாலும் அவமதிப்பதை பாஜக ஏற்றுக் கொள்ளாது எனவும் அவமதிப்பதை பாஜக ஒரு போதும் ஆதரிக்காது எனப் பதிலளித்தார்.