ஓமந்தூரார் மருத்துவமனை தலைமை செயலகமாக மாறப் போகிறதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறிய தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan24 August 2023, 1:27 pm
கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.8.72 கோடி மதிப்பு நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரத்தை தொடங்கி வைத்தபின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை தொடர்ந்து செயல்படும்.
ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை ஒருபோதும் தலைமை செயலகமாக மாறாது. 500க்கும் மேற்பட்ட முறை இந்த பதிலை கூறிவிட்டேன், மீண்டும் சட்டப்பேரவையாக மாற்றப்படாது என்றார்.
இதுதொடர்பாக மேலும் கூறுகையில், ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, பன்னோக்கு மருத்துவமனையாகவே இயங்கும் என்று தமிழக முதலமைச்சர் அறிவித்ததுக்கு பிறகு தான், இந்த மருத்துவமனையை கட்ட தொடங்கினர்.
அதுமட்டுமில்லாமல் பன்னோக்கு மருத்துவமனை என்ற பெயரை மட்டுமே இருந்ததை தவிர சிறப்பு மருத்துவ வசதிகள் எதுமே இல்லாமல் இருந்தது.
திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் 34 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய்க்கான அதிநவீன கருவியை திறந்து வைக்கப்பட்டது. கருவில் இருக்கும் குறை தன்மையை கண்டறியும் ஆய்வகத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்த இரண்டும் முதன் முதலில் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இதுபோன்று பல்வேறு மருத்துவ வசதிகள் இந்த ஓராண்டில் மட்டும் செய்யப்பட்டுள்ளது.
ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவ சேவையும், தேவையும் அதிகரித்து வருவதால் எந்த சூழலிலும் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படாது என்பதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தைரியமாக சொல்லலாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் தலைமைச் செயலகம் கொண்டுவரப்படும் என தகவல்கள் பரவிய நிலையில் அமைச்சர் விளக்கமளித்தார்.