கருவில் உள்ள சிசு ஆணா? பெண்ணா?என ஸ்கேன் செய்து கருக்கொலை செய்த சம்பவம் : பாதிக்கப்பட்ட பெண் கூறிய வாக்குமூலம்… பெண்கள் உட்பட சிக்கிய 7 பேர்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 May 2022, 9:02 pm

நவீன முறையில் மொபைல் ஸ்கேன் கருவி மூலம் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கண்டறிந்து கருவிலேயே கருக்கொலை செய்த சம்பவம் தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டிணம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்த வனஜா ராகவன் தம்பதியனருக்கு ஏற்கனவே இரண்டு பெண்குழந்தைகள் உள்ளது.

மீண்டும் கருவுற்ற வனஜா தனது சொந்த பணிக்காக காவேரிபட்டிணத்திற்கு பேருந்தில் செல்லும் போது பேருந்தில் அருகே அமர்ந்திருந்த பெண் ஒருவர் அறிமுகம் ஆகி வனஜாவிடம் பேச்சுக்கொடுத்துள்ளார்.

அப்போது தனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தான் நிறைமாத கர்பினியாக உள்ளதாக கூறியதையடுத்து அதற்கு அருகே இருந்த பெண்மணி கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறிந்து சொல்ல தனக்கு தெரிந்த நண்பர்கள் உள்ளதாகவும் அவர்களிடம் தீர்வு கிடைக்கும் என கூறி வனஜாவிடம் திருப்பத்தூரை சேர்ச்த ஜோதி என்பவரின் தொடர்பு எண்ணை கொடுத்துள்ளார்.

அப்பொழுது அவரை தொடர்பு கொண்ட போது கடந்த 12 ந் தேதி தருமபுரி பேருந்து நிலையத்திற்கு வரசொல்லி அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனரான வெங்கடேசன் என்பவரது வீட்டிற்கு காரில் அழைத்து சென்று கருவில் இருப்பது ஆணா பெண்ணா என கண்டறியும் நவீன மொபைல் ஸ்கேன் கருவி கொண்டு சோதனை செய்துள்ளனர்.

அதனை தொடர்ந்து சோதனையில் பெண்குழந்தை என தெரிந்ததும் அதனை அழிக்க வனஜா, ஜோதியிடம் சம்மதம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து கருகலைப்பு செய்ய சுமார் 20 ஆயிரம் ஆகும் என தெரிவித்தார்.

பின்னர் 14 ம் தேதி பணத்துடன் வந்த வனஜாவிற்கு வெங்கடேசன் வீட்டில் தருமபுரி அடுத்த அழகாபுரி பகுதியை சேர்ந்த கற்பகம் என்ற தனியார் செவிலியர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கருச்சிதைவு செய்துள்ளார்.

இதில் கருவில் இருந்து குழந்தை வெளியே எடுக்கும் பொழுது சிசுவின் தலை பிறப்புறுப்பில் சிக்கி கொண்டதால் வனஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

ஆனால் கருகலைப்பு செய்த கும்பல் குழந்தையை அப்படியே வயிற்றிலேயே விட்டு விட்டு அதனை மறைத்து கருகலைப்பு செய்த கும்பல் அப்படியே அந்த பெண்ணை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வீட்டிற்கு சென்ற வனஜாவிற்கு அதிக வலி ஏற்பட்டதால் அவரை அவரது தாயார் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

ஆனால் ஆபத்தான நிலையில் வனஜா இருந்ததால் அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியதன் பேரில் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றுக் கொண்டு கொடுத்த ரகசிய தகவலின் பேரில் தருமபுரி மாவட்ட மருத்துவத்துறை ஊரக பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனிமொழி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதில் மருத்துவர் கனிமொழிக்கு தருமபுரி அருகே ராஜபேட்டை ஏரிக்கரை அருகே ஆட்டோ டிரைவர் வெங்கடேஷ் என்பவர் வீட்டில் கருவுற்ற பெண்கள் 6 பேருக்கு ஸ்கேன் செய்வதற்கு இன்று அழைத்து சென்றதாக ரகசிய தகவலின்படி மருத்துவர் கனிமொழி தருமபுரி நகர காவல் ஆய்வாளர் நவாஸ், காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட காவல் துறையினர் ராஜபேட்டையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஜோதி, சதீஷ்குமார், சுதாகர், தருமபுரி மாவட்டம் அழகாபுரி பகுதியை சேர்ந்த கற்பகம், பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த சரிதா, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த குமார், செட்டிகரை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வெங்கடேசன் ஆகிய 7 பேரும் பாலின தேர்வு தடை செய்தல் சட்டத்தின் படி, ஆட்டோ டிரைவர் வெங்கடேஷின் வீட்டில் 6 கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து ம் ஒரு ஸ்கேன் கருவி கொண்டு, தாங்கள் டாக்டர்கள் என்று கூறி கர்ப்பிணிப் பெண்களை ஏமாற்றி கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்கிற தகவலை சொல்லப்பட்டதை கண்டறியப்பட்டு, இதில் கற்பகம், ஜோதி சதீஷ் ஆகியோர் எவ்வித மருத்துவ படிப்பும் படிக்காமல் இடைதரகர்கள் வெங்கடேசன் சரிதா மூலம் 6 கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் பரிசோதனை செய்யும் இடத்திற்கு அழைத்து வந்தது கண்டறியப்பட்டது.

தருமபுரி நகர காவல் துறையினர் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு இவர்களுக்கு வேறு இடைதரகர்களுடன் தொடர்பு உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் தருமபுரி நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!