அரசு கேபிளை முடக்கி தனியாருக்கு தாரை வார்க்க முயற்சியா? அரசு கேபிள் அலுவலகத்தை ஆபரேட்டர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan21 November 2022, 9:54 pm
கோவை கேபிள் ஆப்ரேட்டர்கள் அரசு கேபிள் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் இரும்பு பெண்மணி என அனைவராலும் போற்றப்பட்ட செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்கள் குறைந்த கட்டணத்தில் அனைத்து முன்னணி சேனல்களையும் கண்டுகளித்திடும் விதவிதமாக அரசு கேபிள் டிவி நிறுவனத்தை துவக்கி தமிழகம் முழுவதும் மக்கள் பயன்படும் வகையில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் திமுகவின் ஆட்சியின் நிர்வாக கோளாரால் கோவை மாவட்டத்தில் இன்று நான்காவது நாளாக அரசு கேபிள் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அரசு கேபிள் ஆபரேட்டர்களும், பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளார்கள். மேலும் தனியார் செட்டாப் பாக்ஸ் நிறுவனங்களிடமிருந்து பெருமளவில் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசு கேபிள் நிறுவனத்தை முடக்குவதற்கு திமுகவின் விடியா அரசு துணை போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இரண்டு நிறுவனங்கள்தான். அரசு செட்டாப் பாக்ஸ்கள் வாங்கப்பட்டு வருடாந்திர நிர்வகிக்கும் சேவைகளை ராஜனின் இரண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.
இந்த நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சுமார் ரூ.52 கோடி பணம் அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும், இதனால் சட்டவிரோதமாக இணையத்தை பயன்படுத்தி அரசு பொதுமக்களுக்காக அளித்த கேபிள் சேவையை சீர்குலைக்கும் வகையில் தன் கட்டுப்பாட்டில் உள்ள 21 லட்சம் தமிழக அரசு கேபிள் டிவி வாடிக்கையளர்களின் செட்டாப் பாக்ஸ்களை செயல்படாமல் தொழில்நுட்ப ரீதியாக ராஜன் பாதிப்பு ஏற்படுத்தயுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோவையில் உள்ள அரசு கேபிள் ஆபரேட்டர்கள் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள அரசு கேபிள் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் பொறுப்பான பதில்கள் எதுவும் வராததால் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளித்துள்ளோம். பொதுமக்களிடம் எங்களால் பதிலளிக்க முடியவில்லை என ஆபரேட்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
முறையான பதில்கள் வரவில்லை என்றால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், எங்களுக்கு தகவலை சொன்னால்தான் இந்த தொழிலை நம்பி இருக்கும் நாங்கள் வேறு தொழிலை பார்த்து செல்வோம் என குமுறுகின்றனர்.