தமிழ் நாட்டுப்புற கலைஞர்களை மேடை ஏற்றும் ஈஷா: பல்வேறு மாநில மக்கள் கண்டு ரசித்த பிரமாண்ட நிகழ்ச்சி..!!
Author: Rajesh7 March 2022, 5:48 pm
நம் தமிழ் மண்ணில் பிறந்த நாட்டுப்புற கலைகளுக்கு அங்கீகாரமும் வாய்ப்பும் அளிக்கும் விதமாக 4 நாள் கலை திருவிழாவை ஈஷா ஏற்பாடு செய்துள்ளது. இவ்விழாவை பல்வேறு மாநிலங்களில் இருந்து ஈஷாவிற்கு வருகை தரும் ஏராளமான மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மார்ச் 5ம் தேதி முதல் பல்வேறு விதமான நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் ஆதியோகி முன்பு நடைபெற்று வருகின்றன. 2ம் நாளான நேற்று திருவிழா காலங்களில் ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை நடனம் மற்றும் பாடல்கள் மூலம் சொல்லும் கட்டைக்கூத்து நடைபெற்றது.
இதில் புகழ்பெற்ற பெண் கட்டைக்கூத்து கலைஞர் திருமதி. திலகவதி அவர்களின் ஸ்ரீ கிருஷ்ணா கட்டைக்கூத்து குழுவினர் பங்கேற்று பஞ்ச பூதங்கள் மற்றும் சிவன், பார்வதி கதைகளை கூத்து வடிவில் வெளிப்படுத்தினர். சுமார் இரண்டரை மணி நேரம் நடந்த இந்த கலை நிகழ்ச்சியை பல்வேறு மாநில மக்கள் கண்டு களித்தனர்.
பெரும்பாலும் ஆண்கள் மட்டும் நிகழ்த்தும் கட்டைக்கூத்தை சிறப்பாக நிகழ்த்துவதிலும், மற்றவர்களுக்கு கற்று கொடுப்பதிலும் திருமதி. திலகவதி அவர்கள் முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.மார்ச் 5ம் தேதி தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பிரபல கிராமிய இசை பாடகி திருமதி. ரீட்டா அந்தோணிதாசன் அவர்கள் நாட்டுப்புற பாடல்களை பாடி பார்வையாளர்களின் கைத்தட்டல்களை பெற்றார்.
அத்துடன், அக்குழுவினர் கரகாட்டமும், காவடி ஆட்டமும் ஆடி மக்களை மகிழ்வித்தனர். மேலும், ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் தேவார பாடல்களை பாடி மக்களை பக்தியில் ஆழ்த்தினர்.மார்ச் 7ம் தேதி கஜஹஸ்தானில் இருக்கும் இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் யோகா மையத்தினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சியும், பரத நாட்டியமும் நடைபெற உள்ளது. மார்ச் 8ம் தேதி ஈஷாவை சுற்றியுள்ள மலைவாழ் கிராமங்களில் வாழும் இருளர் பழங்குடி மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
தினமும் இரவு 7 மணிக்கு தொடங்கும் இக்கலை நிகழ்ச்சிகள் இரவு 10 மணி வரை நடைபெறும். இடையில் ஆதியோகி திவ்ய தரிசனமும் நடைபெறும்.