மன நோய்களில் இருந்து விடுபடும் வழி…! ஈஷா கிராமோத்சவத்தில் சத்குரு பகிர்ந்த ரகசியம்…!!
Author: Babu Lakshmanan18 October 2023, 4:08 pm
“வாழ்க்கையில் விளையாட்டுத் தன்மை மிகவும் தேவை. அது இல்லாததால் தான் மன நோய்கள் உருவாகின்றன. அதை தாண்டி வருவதற்கு எந்தவொரு செயலாக இருந்தாலும், வாழ்வில் விளையாட்டுத் தன்மை தேவை” என தெரிவித்தார் சத்குரு. ஈஷா அவுட்ரீச் சார்பாக, ஈஷா கிராமோத்சவம் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
தென்னிந்திய அளவில் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது ஈஷா கிராமோத்சவம் திருவிழா. 6 மாநிலங்களில் 25000 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 60,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்ற ஈஷா கிராமோத்சவம் விழா பாரதத்தின் மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா என்ற பெருமையை பெற்றுள்ளது. அந்த பிரம்மாண்ட நிகழ்வின் இறுதி போட்டிகள் கடந்த மாதம் செப் 23 அன்று கோவை ஆதியோகியின் முன்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. அனுராக் தாகூர், முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் திரு.தன்ராஜ் பிள்ளை மற்றும் நடிகர் சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களோடு ஈஷா யோக மையத்தின் நிறுவனர் சத்குரு அவர்களும் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சத்குரு, “ஈஷா கிராமோத்சவம் திருவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. போட்டி மனப்பான்மை தேவை என்ற போதும், போட்டியை தாண்டி ஒற்றுமையுடனும் மற்றும் ஜாதி, மத, வயது பேதமின்றி அனைவரும் ஒன்று கூடி விளையாடியது தான் இந்த விழாவின் வெற்றி. இந்த ஒற்றுமை தான் கிராமோத்சவத்தின் நோக்கம்.
மேலும் வாழ்க்கையில் விளையாட்டுத் தன்மை தேவை. அது இல்லை என்றால் வாழ்க்கை சுமையாகிவிடும். எனவே செய்யும் செயல், தொழில், குடும்பம் என அனைத்திலும் விளையாட்டுத் தன்மையை கொண்டு வர வேண்டும். இது எல்லாரையும், எல்லா கிராம மக்களையும் சென்று சேர வேண்டும். கிராமத்தில் இருக்கும் மக்கள் பல வலிகளை சகித்து கொண்டு வாழ்கிறார்கள். அந்த வலியிலிருந்து மீண்டு வர விளையாட்டுத் தன்மை தேவை.
நம் கலாச்சாரத்தில் எல்லா செயலுக்குப் பின்னும் ஓர் ஆட்டம் பாட்டம் இருந்தது, ஆனால் இப்போது அதை மறந்து வேலையை மட்டுமே செய்கிறோம். மீண்டும் அந்த ஆனந்தத்தை மீட்டு கொண்டு வர வேண்டும். இது இப்போதைய தேவை. இது இல்லாமல் சுகமாக வாழ முடியாது. இதற்காக தான் இந்த கிராமோத்சவம்” என்று பேசினார்.