கோவையில் கோலாகலமாக தொடங்கிய ‘ஈஷா கிராமோத்சவம்’ போட்டிகள்.. நூற்றுக்கணக்கான வீரர்கள் பங்கேற்பு!!
Author: Babu Lakshmanan12 August 2023, 4:39 pm
தென்னிந்திய அளவில் நடத்தப்படும் ‘ஈஷா கிராமோத்சவம்’ விளையாட்டு திருவிழாவின் கிளெஸ்டர் அளவிலான போட்டிகள் கோவையில் இன்று (ஆக.12) கோலாகலமாக தொடங்கியது.
முதல்கட்டமாக, நூற்றுக்கணக்கான கிராமிய அணிகள் பங்கேற்ற வாலிபால் போட்டிகள் தொண்டாமுத்தூர், காரமடை, சூலூர், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் இன்று நடைபெற்றன. தொண்டாமுத்தூர் கிளெஸ்டர் அணிகளுக்கான போட்டிகள் சந்தேகவுண்டம்பாளையத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளியில் நடைபெற்றது.
இதில் நூற்றுக்கணக்கான வீரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். இக்கரை போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு. சதானந்தம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைத்தார்.
இதேபோல், பொள்ளாச்சியில் உள்ள என்.ஜி.எம். கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை மாரியம்மன் உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர்கள் திரு. செல்வகுமாரசாமி மற்றும் திரு. கோபி ஆனந்த் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இன்றும் நாளையும் நடைபெறும் கிளெஸ்டர் போட்டிகளில் தேர்வாகும் அணிகள் அடுத்த மாதம் நடைபெறும் டிவிஸினல் போட்டிகளில் விளையாட தகுதி பெறும்.