ஈஷா மஹா சிவராத்திரியில் இலவசமாக பங்கேற்கலாம்… ஆனா, ஒரு கண்டிசன்… ஈஷா யோகா மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
10 February 2023, 3:18 pm

கோவையில் நடைபெறும் ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இலவசமாக பங்கேற்க விரும்பும் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

‘தென் கயிலாயம்’ என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு மஹா சிவராத்திரி விழா பிப்ரவரி 18-ம் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ஆதியோகி முன்பு மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

இவ்விழாவில் நேரில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் https://isha.co/msr23-tn என்ற லிங்கை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இலவசமாக பங்கேற்க விரும்புபவர்கள் ‘தாமிரபரணி’ என்ற பிரிவை தேர்வு செய்து பெயர், அலைபேசி எண், இ – மெயில் முகவரி போன்றவற்றை பதிவிட்டு முன்பதிவு செய்ய வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்த முன்பதிவு நடைபெறும்.

வெற்றிகரமாக முன்பதிவு செய்த பிறகு, விழாவில் பங்கேற்பதற்கான இ – பாஸ் பதிவு செய்தவர்களின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். பிப்ரவரி 18-ம் தேதி ஈஷாவிற்கு வரும் போது, மலைவாசல் அருகே இருக்கும் நுழைவு சீட்டு வழங்கும் இடத்தில் இந்த இ-பாஸை காண்பித்து நுழைவு சீட்டை பெற்று கொள்ளலாம்.

இவ்விழா மாலை 6 மணிக்கு தியானலிங்கத்தில் நிகழ்த்தப்படும் பஞ்சபூத ஆராதனையுடன் தொடங்கும். லிங்க பைரவி தேவியின் மஹா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்திவாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுடன் விழா விடிய விடிய களைக்கட்ட உள்ளது. விழாவில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் அன்றைய தினம் இரவு மஹா அன்னதானம் வழங்கப்படும்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!