நாட்டுப்புற நடனங்களால் களைக்கட்டிய ஈஷா… பார்வையாளர்களை கவர்ந்த சிவாஜி ராவ் குழுவினரின் கிராமிய நடனம்!!

Author: Babu Lakshmanan
16 October 2023, 8:04 pm

ஈஷா நவராத்திரி கொண்டாட்டத்தின் 2-ம் நாளான இன்று (அக்.16) தஞ்சாவூரைச் சேர்ந்த கலைமாமணி சிவாஜி ராவ் குழுவினரின் கிராமிய நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.

கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தில் நவராத்திரி விழா தினமும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 2-ம் நாளான இன்று கிராம தெய்வங்களை போற்றி வணங்கும் பல்வேறு நாட்டுப் புற நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

போளுவாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் திரு. சதானந்தம், வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குநர் திரு. கிட்டுசாமி, கோவை விவசாய சங்க தலைவர் திரு. சுந்தரராமசாமி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.

30 வருடங்களாக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் கலைமாமணி சிவாஜி ராவ் அவர்களின் தலைமையில் இக்கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முருக பெருமானை வணங்கி அவர் ஆடிய காவடியாட்டத்தை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்து பாராட்டினர்.

மேலும், தஞ்சை ராணி கோகிலா அவர்களின் கரக்காட்டம், ஜீவாராவ், பொன்னி ஆகியோரின் பொய்க்கால் குதிரையாட்டம், சித்தார்த்தன், ரியாஸ், குமார் ஆகியோரின் மாடு மற்றும் மயில் நடனங்கள், செல்வம் அவர்களின் பறையாட்டம் மற்றும் சக்கரை குழுவினரின் நையாண்டி ஆட்டம் என அடுத்தடுத்து சுமார் 2 மணி நேரம் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் விழா களைக்கட்டியது.

கலைஞர் சிவாஜி ராவ் அவர்கள் அமெரிக்கா, லண்டன், மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளிலும், இந்தியா முழுவதும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை நடத்திய பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நவராத்திரியை முன்னிட்டு ஈஷாவில் இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் வரும் 23-ம் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு நடைபெறும். நாளை (அக்.17) உமா நந்தினி அவர்களின் தேவாரம் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ