போதையிலிருந்து மீட்டு புதிய பாதையை காட்டும் ஈஷா கிராமோத்சவம்…. கிராம மக்கள் நெகிழ்ச்சி பதிவு…!
Author: Babu Lakshmanan31 October 2023, 5:07 pm
கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிப்பதன் மூலம் மது, புகை உள்ளிட்ட தீய பழக்கங்களில் இருந்து அவர்கள் மீள்வதாக தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளனர் கிராம மக்கள்.
ஈஷா கிராமோத்சவம் விளையாட்டு திருவிழா என்பது மற்ற அனைத்து விளையாட்டு போட்டிகளிலிருந்தும் மாறுபட்ட ஒன்று. இதில் தேசிய, மாநில அளவில் உள்ள விளையாட்டு வீரர்களோ, கல்வி நிறுவனம் அல்லது தொழில் முறை விளையாட்டு வீரர்களோ அல்லது ஏற்கனவே சிறந்து விளங்கும் வீரர்களுக்கோ அனுமதி இல்லை. ஒவ்வொரு கிராமங்களிலும் அந்தந்த கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒரு அணியை உருவாக்கி இப் போட்டிகளில் பங்கெடுக்க வேண்டும்.
இதன் மூலமாக ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் ஒரு புது அணி உருவாகவும்,பழைய அணி புத்துணர்வு பெறவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. போட்டி மனப்பான்மை, ஜாதி, மதம், வயது உள்ளிட்ட எந்த பேதமும் இன்றி குழுவாக சேர்ந்து பயிற்சி செய்வதால், இளைஞர்களின் தலைமை பண்பு மற்றும் ஒற்றுமை அதிகரிக்கிறது. இந்த போட்டியில் பரிசுகளை வெல்வது என்கிற ஒற்றை பலனை தாண்டி கிராமத்தின் சமூக ஒற்றுமை, கிராம மக்களின் ஆரோக்கிய மேம்பாடு, பெண்களின் சுய சார்புதன்மை என பல அம்சங்களை பயனாக பெற முடிகிறது. மிக முக்கியமாக இளைஞர்களை மது, புகை உள்ளிட்டபோதை பழக்கத்திலிருந்து மீட்டுள்ளது ஈஷா கிராமோத்சவம்.
இந்த மாற்றத்தை கண்கூடாக பார்த்த கிராம மக்கள் தங்கள் அனுபவத்தை பகிரும் போது, “மாலை நேரங்களில் செய்வதற்கு ஏதுமின்றி பலர் தீய பழக்கத்திற்கு அடிமையாகி வந்தனர். ஆனால் ஈஷா கிராமோத்சவ போட்டிகளால் அனைவரும் ஒன்றாக கூடி மாலை நேரத்தில் விளையாட்டு பயிற்சி செய்கிறோம். நேரத்தை ஆக்கபூர்வமாக செலவிடுவதால் தீய பழக்கத்திலிருந்து பலர் விடுபட்டுள்ளனர்” என்று கருத்து தெரிவித்தனர்.
விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களின் அன்றாட வாழ்வில்உற்சாகத்தையும் புத்துணர்வையும் உருவாக்குவது தான் ஈஷா கிராமோத்சவத்தின் அடிப்படை நோக்கம். இதே கருத்தை வலியுறுத்தும் விதமாக, 15 ஆவது முறையாக நடைபெற்ற இந்த ஆண்டின் ஈஷா கிராமோத்சவம் இறுதி போட்டியில் சிறப்பு விருந்தினர்களுள் ஒருவராக கலந்து கொண்டார் நடிகர் சந்தானம்.
அவர் பேசுகையில் “புகை மது உள்ளிட்ட போதைப் பழக்கத்திலிருந்து வெளியே வருவதற்கான ஆற்றலை விளையாட்டு கொடுக்கும். அதை சரியாக கையில் எடுத்திருக்கிறார் சத்குரு” என பாராட்டு தெரிவித்தார்.