ஈஷாவில் கோலாகலமாக தொடங்கிய ‘யக்‌ஷா’ கலை திருவிழா.. 3 நாட்களுக்கு இசைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு!!

Author: Babu Lakshmanan
16 February 2023, 8:45 am

கோவை ஈஷா யோக மையத்தில் ‘யக்‌ஷா’கலைத் திருவிழா இன்று (பிப்.15) கோலாகலமாக தொடங்கியது. சங்கரா கண் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பத்மஸ்ரீ டாக்டர். ஆர்.வி. ரமணி அவர்கள் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

ஈஷாவின் மஹாசிவராத்திரி விழா வரும் 18-ம் தேதி மிக விமரிசையாகவும், பிரம்மாண்டமாகவும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும் ‘யக்‌ஷா’ கலைத் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. இந்நிகழ்ச்சி கலாச்சாரம், இசை மற்றும் நடனத்தின் செறிவை பறைசாற்றும் விதமாக உலகப்புகழ் பெற்ற கலைஞர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.

விழாவின் தொடக்கமாக பண்டிட் திரு. ஜெயதீர்த் மேவுண்டி அவர்களின் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அவரின் அற்புதமான இசை, அங்கு கூடியிருந்த அனைவரையும் மெய் மறக்கச் செய்தது. உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டு களித்தனர்.

அகில இந்திய வானொலியில் ‘ஏ-டாப்’ கிரேடு பெற்ற, ‘கிரானா கரானா-வின் ஒளி’ என வர்ணிக்கப்படும் திரு. ஜெயதீர்த் மேவுண்டி அவர்கள் பண்டிட். ஜஸ்ராஜ் கவுரவ் புரஸ்கார், யங் மேஸ்ட்ரோ விருது, மேவதி கரானா சங்கீத் கவுரவ் புரஸ்கார், சண்முகானந்தா சங்கீத் ஷிரோமணி விருது போன்ற விருதுகளை பெற்ற பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து இன்று (பிப். 16) புல்லாங்குழல் இசைக்கலைஞர் திரு. சஷாங்க் சுப்ரமணியம் அவர்களின் இசை நிகழ்ச்சியும், நாளை (பிப். 17) மாதவி முத்கல் குழுவினரின் ஒடிசி நடன நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகள் ஈஷாவில் உள்ள சூர்யகுண்டம் மண்டபம் முன்பாக தினமும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அனுமதி இலவசம்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ