30 ஆண்டுகளில் நிலவில் இந்திய தொழிற்சாலை… மின்கட்டணத்தை குறைக்க மெகா திட்டம் ; இஸ்ரோ விஞ்ஞானி சிவதாணு பிள்ளை!!
Author: Babu Lakshmanan12 August 2022, 10:17 pm
30 ஆண்டுகளில் நிலவில் இந்தியாவின் தொழிற்சாலை அமைய உள்ளதாகவும், ஹீலியம் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டால், இந்தியாவில் மின்சாரத்தின் விலை குறையும் எனஇஸ்ரோ பிரமோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில் உள்ள விவேகானந்தா தனியார் மெட்ரிக் பள்ளியில்
75 ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ‘தேசத் தலைவர்களை அறிவோம் சுதந்திரத்தை போற்றுவோம்,’ என்ற நிகழ்வில் இஸ்ரோ பிரமோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கலந்து கொண்டு மாணவர்களிடம் கலந்துரையாடி பாராட்டி பரிசுகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- பிரதமர் கூறியபடி 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி 75 தகவல் தொடர்பு சேட்டிலைட்டுகள் அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் உள்ள மாணவர்கள் மூலம் உருவாக்கப்பட்டு அக்டோபர், டிசம்பர் மாதத்தில் ஏவப்பட உள்ளது. இது ஒரு பெரிய திட்டம். இப்பள்ளி மாணவர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்.
ராக்கெட் அறிவியல் பள்ளி பாட புத்தகத்தில் இல்லை. அதை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் அரசு, தனியார் பள்ளிகளில் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். கிராமப்புற மாணவர்களிடம் அதிகப்படியான அறிவு திறன் உள்ளது. இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருப்பார்கள். உலகை பாதுகாப்பது இந்த சூழ்நிலையில் பெரும் சவாலாக உள்ளது.
கார்பன்டை ஆக்சைடு, ஓசோன் ஓட்டை, பனிக்கட்டி உருகுதல், வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் ஆகியவை உலகத்திற்கு ஒரு சவாலான ஒன்று. ஆண்டுக்கு 51 மில்லியன் டன் கார்பன் டை ஆக்சைடு உற்பத்தி செய்கிறது. அதை குறைப்பது போன்ற நடவடிக்கைககளில் ஈடுபட வேண்டும். மரங்களை வளர்க்க வேண்டும். இளைஞர்கள் அதில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
நாசா மூலம் 2024 க்குள் நிலவுக்கு ஆண்கள் சென்றதைப் போன்று, பெண்கள் செல்ல உள்ளார்கள். ராமர் பிள்ளை இயற்கை பெட்ரோல் தான், பெட்ரோல் உற்பத்தி செய்வதை உரிய முறையில் அவரால் நிரூபித்து காட்டவில்லை. அதை அங்கீகரிக்கவும் இல்லை. சேட்டிலைட் ஏவும் போது இலங்கைக்கு பாதிப்பு இல்லாமல் குலசேகர பட்டினத்தில் புதிய ராக்கெட் எவுதளம் அமைக்கப்பட உள்ளதால், அப்பகுதி நல்ல வளர்ச்சி பெறும்.
நேரடியாக அங்கிருந்து ராக்கெட் ஏவப்படுவதால் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மகேந்திரகிரி போன்று குலசேகரப்பட்டினமும் நல்ல வளர்ச்சி அடையும். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா உலகத்திலே முதன்மை நாடாக விளங்கியது. அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் என அனைத்து துறைகளிலும் முதன்மையாக விளங்கியது.
நிலவில் உள்ள ஹீலியத்தை வைத்து மின் உற்பத்தி செய்ய அனைத்து நாடுகளும் முயன்று வருகின்றன. ஹீலியம் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டால், 20 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் தொடங்கும் மின்சாரத்தின் விலைகுறையும். 30 ஆண்டுகளில் நிலவில் இந்தியாவின் தொழிற்சாலை அமைய உள்ளது.
வளர்ந்த மற்றும் வல்லரசு நாடாக இந்தியாவை மாற்றுவது அனைத்து இளைஞர்களின் கடமை. ஒவ்வொருவரின் எண்ணங்கள் உயர்வாக இருக்க வேண்டும். அறிவை தேட வேண்டும். அப்போதுதான் வாழ்க்கையில் முன்னேற முடியும். மறைந்த அப்துல் கலாம் அவர்கள் அவருடைய மூளையை நம் அனைவருக்கும் கொடுத்து சென்றுள்ளார்.
நமக்கு உணவுக்கு தட்டுப்பாடு இல்லை. 300 மில்லியன் டன் உணவை உற்பத்தி செய்கிறோம். விவசாயத்தை சேட்டிலைட் தொழில்நுட்பம் மூலமே கண்ட்ரோல் செய்கிறோம், என அவர் பெருமிதம் தெரிவித்தார்.