அமைச்சர் பதவியே போனாலும் பரவாயில்லை.. முடிஞ்சா தேர்தல்ல மோதுங்க : ஆளுநருக்கு உதயநிதி சவால்!!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2023, 6:31 pm
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி காலை 9 மணி முதல் தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவுரையாற்றினார்.
அப்போது அவர் கூறும்போது, நீட் தேர்வால் தமிழகத்தில் இதுவரை 21 உயிர்களை இழந்துள்ளோம். நீட் தேர்வு உயிரிழப்பிற்கு மத்திய அரசும் அதிமுகவும் தான் காரணம்.
உண்ணாவிரதப் போராட்டத்தில் நீட்டால் உயிரிழந்தவர்களின் அண்ணனாக பங்கேற்றுள்ளேன். அமைச்சர் பதவி போனாலும் பரவாயில்லை என்றுதான் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டேன்.
கவர்னர் வெறும் தபால்காரர், அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது. தமிழக மக்களைப் பற்றி கவர்னருக்கு ஒன்றும் தெரியாது. பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழகத்தில் தேர்தலில் நிற்க கவர்னர் ரவி தயாரா? கவர்னர் ரவியை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாதா? உங்கள் சித்தாந்தங்கள் இந்த மண்ணில் எடுபடாது.
தமிழகத்திற்கு பாஜக என்ற கட்சி தேவையற்றது. பாஜக, அதிமுகவை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். தமிழக மாணவர்கள் சற்று பொறுமை காக்க வேண்டும். நீட் என்பது தகுதியற்ற தேர்வு, நீட் தேர்வை ஒழித்தால் தான் தமிழகத்திற்கு விடியல். நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பம் மட்டுமே. டெல்லியில் அடுத்தகட்ட போராட்டம் நடத்தப்படும்.
நீட் தேர்வுக்கு எதிராக இணைந்து டெல்லியில் போராட்டம் நடத்த அதிமுகவிற்கு அழைப்பு விடுக்கிறேன். அதிமுகவினர் எங்களுடன் வாருங்கள், பிரதமர் வீட்டிற்கு முன்பு அமர்ந்து நீட்டுக்கு எதிராக போராடுவோம். ஒன்றாக போராடி நீட் தேர்வு ரத்தானால் அந்த வெற்றியை அதிமுகவே வைத்து கொள்ளட்டும் என கூறினார்.