பழைய ஸ்டூடன்ட்ஸ்களை சமாளிப்பது கஷ்டம்.. யாரை சொன்னார் ரஜினி? நூல் வெளியீட்டு விழாவில் பரபர!
Author: Udayachandran RadhaKrishnan25 August 2024, 11:50 am
மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியுடனான தனது நினைவுகளை ‘கலைஞர் எனும் தாய்’ எனும் பெயரில் நூலாக எழுதியுள்ளார் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எவ வேலு. இந்த நூல் வெளியீட்டு விழா நேற்று மாலையில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது.
இந்த விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அமைச்சர்கள், திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அதேபோல் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்றார்.
அதன்பிறகு அமைச்சர் எவ வேலு எழுதிய ‛கலைஞர் எனும் தாய்’ நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்று கொண்டார்.
அதன்பிறகு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அப்போது அவர் முதல்வர் ஸ்டாலின் பற்றி பெருமையாக பேசினார். இதுதொடர்பாக ரஜினிகாந்த் பேசியதாவது: நான் எப்போதாவது ஒருமுறை தான் பேசுகிறேன். இந்த மேடைகளில் பேச வேண்டும் என்றால் எப்போதும் பேசி பழக்கம் இருக்க வேண்டும். அறிவார்ந்த சபையில் பேசாமல் இருப்பது தான் அறிவாளித்தனம் என்று சொல்வார்கள்.
இப்போது என்ன செய்றது நான் பேசி தான் ஆக வேண்டும். தப்பா இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். கருணாநிதி நூற்றாண்டு வெற்றி விழாவை அவரது உடன் பிறப்புகள், முதல் அமைச்சர் ஸ்டாலின் என அனைவரும் ஆண்டு முழுவதும் கொண்டாடிய விதம் இருக்கே.. எத்தனை மாவட்டங்கள்.. எத்தனை எத்தனை விதமான கொண்டாட்டம் அது.
உலகத்திலேயே எந்த அரசியல் தலைவர்களுக்கு இப்படியொரு நூற்றாண்டு விழாவை கொண்டாடி இருக்க மாட்டார்கள். இனியும் கொண்டாடபோவது இல்லை.
எந்த அளவுக்கு அவர் மீது அன்பு பாசம், இருந்தால் பேசுபவர்கள், கேட்பவர்களுக்கு சலிப்பு தட்டாமல், ராமாயணம் கேட்கும் பக்தர்கள் போல் கேட்பார்கள். முதல்வருக்கு பல வேலைகள் இருந்தாலும் கூட அவரே தலைமை தாங்கி விழா எடுத்தார்கள்.
வெளியே நல்லவங்களாக இருக்கிறவர்கள் வீட்டிற்குள் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. வெளியே ஒருவருக்கு இருக்கும் மரியாதை வீட்டில் இருக்கும் என்று சொல்ல முடியாது. முக ஸ்டாலின் அவரது அப்பாவை பார்த்து இருப்பார். அவர்பட்ட கஷ்டங்கள் வேதனைகள் இருந்தாலும் கூட பொது வாழ்க்கையில் காட்ட முடியாது. எல்லோரும் மனிதர்கள் தான். அதனை வீட்டில் தான் காட்ட முடியும்.
அப்படியானாலும் கூட ஒரு தலைவனாக வீட்டில் கூட அப்படியொரு பாசம், பக்தி கலைஞர் மீது இருந்துள்ளது என்று சொல்லலாம். இந்த விழாவில் என்ன பேச வேண்டும் என்பதை விட எதை பேசக்கூடாது என்று லிஸ்ட் போட்டு தான் வந்தேன்.
எவ வேலு முதலிலேயே என்னிடம் சொன்னார். இது அரசியல் மேடை கிடையாதுங்க. அரசியலுக்கும் இதுக்கும் சம்பந்தமே கிடையாது என கூறி அழைத்தார். கருணாநிதி என்று வந்தால் சினிமா, இலக்கியம், அரசியல் ஆகிய 3 தான் முக்கியம்.
இதில் சினிமா பற்றி நிறைய பேசி இருக்கிறேன். அவரது இலக்கியங்களை அதிகம் படித்தது இல்லை. அப்புறம் இருப்பது அரசியல் தான். அரசியலில் ரொம்ப ஜாக்கிரதையாக பேச வேண்டும்.
ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு பார்லிமென்ட் உள்பட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி அவரது ஆளுமை, உழைப்பு, அரசியல் ஞானத்தை சொல்லும். எத்தனை கட்சிகள் தங்களின் நிறுவன தலைவர் மறைந்த பிறகு சந்ததியினர் மூலம் கட்டிக்காக்க முயன்று தோல்வியடைந்துள்ளனர்.
இன்னும் சிலர் திண்டாடி வருகின்றனர். இதனை நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள். பார்த்து இருப்பீர்கள். ஆனால் அதனை சர்வசாதாரணமாக ஸ்டாலின் செய்து வருகிறார். எப்போதுமே பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள்.
அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல.. இங்கு ஏகப்பட்ட பழைய ஸ்டூடன்ஸ் உள்ளனர். அவர்கள் சாதாரண பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க..
இவங்க ஃபெயிலாவங்க இல்ல.. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்து கொண்டுள்ளனர். அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க..
இதையெல்லாம் விடுங்க துரைமுருகன் என்று ஒருவர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரல் விட்டி ஆட்டியவர். இப்படி ஒன்று செய்யப்போகிறோம் என்று சொன்னால் சந்தோஷம் என்று தான் சொல்வார். நல்லா இருக்கு என்பதால் சந்தோஷம் என்கிறாரா? என்னடா இப்படி பண்றீங்கனு நினைச்சி சந்தோஷம் என சொல்கிறாரா? என ஒன்றும் புரியாது. முக ஸ்டாலின் Hats off too you..”என பேசி சிரித்தார்.
இதையடுத்து மேடையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் ரஜினியை பார்த்து சிரித்தப்படி கையெடுத்து கும்பிட்டார். இந்த வேளையில் மேடையில் இருந்த அனைவரும் குலுங்கி குலுங்கி சிரித்தனர். இதனால் நிகழ்ச்சி அரங்கமே சிரிப்பலையில் மூழ்கியது.