‘இதுல எப்படி தண்ணி பிடிக்கறது’… அடிகுழாயை அகற்றாமலே கான்கிரீட் சாலை போட்ட அவலம்… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அதிகாரிகள்..!!
Author: Babu Lakshmanan13 October 2022, 7:02 pm
கோவை : பொள்ளாச்சி அருகே வடிகால் சீரமைக்கப்படும் போது, ஆழ்குழாய் கிணறு மூடும் வகையில் கான்கிரீட் போடப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலூர் பகுதியில் தமிழக முதல்வர் வருகையை ஒட்டி அவசர அவசரமாக சாலை போட்டதில், சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைக் கூட கண்டுகொள்ளாமல், இருசக்கர வாகனத்துடன் சேர்ந்து கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. இது கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது.
இதேபோல் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளாட்சிகளில் நடக்கும் பல பணிகளில் இது போன்ற பல்வேறு ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூடும் அளவிற்கு சாலைகள் போடுவது என அதிகாரிகளின் அலட்சியப் போக்கு கடும் விமர்சனத்திற்குள்ளாகியது.
இந்நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூலேஸ்வரன்பட்டி பேரூராட்சி 12வது வார்டுக்கு உட்பட்ட வால்பாறை சாலையில் வடிகால் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. அங்குள்ள ஆழ்குழாய் கிணற்றை பயன்படுத்த முடியாத அளவுக்கு கான்கிரீட் போட்டு, பாதி அளவுக்கு மூடி இருப்பதால் அப்பகுதி பொதுமக்களிடையே பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் பயன்படுத்தும் ஆழ்துளை கிணற்றை தற்போது பயன்படுத்த முடியாத அளவிற்கு, கான்கிரிட் போடப்பட்டு மூடியுள்ள ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் அலட்சியத்தாலும், பணியை முறையாக கண்காணிக்காமல் விடுவதாலும், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.