உலகத்தரத்தில் உருவாகும் ஜல்லிக்கட்டு அரங்கம்.. விரும்பினால் அலங்காநல்லூர் போட்டியை அங்கு நடத்தலாம் : அமைச்சர் எ.வ.வேலு!!!
Author: Udayachandran RadhaKrishnan14 July 2022, 9:42 pm
மதுரையில் அமையவுள்ள ஜல்லிக்கட்டு அரங்கம் உலகத்தரத்தில் இருக்கும் எனவும் அலங்காநல்லூர் போட்டியை மக்கள் விரும்பினால் இந்த அரங்கத்தில் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு அரங்கம் அமையவுள்ள இடத்தில் பொதுப்பணி நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, “ஜல்லிக்கட்டு விளையாட்டை முதன்மைப்படுத்தும் நோக்கில் தமிழக முதலமைச்சர் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்படும் என அறிவித்ததை தொடர்ந்து தற்போது மதுரை – அலங்காநல்லூர் அருகேயுள்ள கீழக்கரை கிராமத்தில் இயற்கை எழில் சூழ 66.81 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை மக்கள் விரும்பும் வகையில் நடத்தவும், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாத காலங்களில் பிற விளையாட்டுகள் நடத்தும் வகையிலும் இந்த அரங்கம் அமையவுள்ளது. ஸ்பெயின் போன்ற வெளிநாடுகளில் உள்ளதை விட தரமாக மருத்துவ வசதிகளுடன் இந்த நிரந்தர விளையாட்டு அரங்கம் அமையவுள்ளது.
அரங்கம் அமையவுள்ள இடத்தை தொடர்புபடுத்தும் வகையில் சிட்டம்பட்டி – வாடிப்பட்டி இடையே தேசிய நெடுஞ்சாலை துறை அமைத்து வரும் புறவழி சாலையுடன் இணைந்து 3 கிமீ தொலைவிற்கு புதிய சாலை அமைக்கப்பட உள்ளது.
விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 4 தனியார் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு வரைபடங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஓராண்டு காலத்தில் கட்டுமான பணிகளை துவக்க திட்டமிட்டுள்ளோம்.
அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வரும் இடங்களிலேயே ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் புதிய அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.
கலைஞர் நினைவு நூலக உட்புற கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 250 பேர் அமரும் வகையில் வடிவமைக்கப்பட்ட அரங்கத்தில் சிறு மாறுதல் செய்து 700 பேர் அமரும் வகையிலான அரங்கம் அமைக்கப்பட உள்ளது. 4 மாதங்களில் நூலகத்தை பயன்பாட்டுக்கு திறந்து வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.