நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி… ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தகுதிச் சான்றிதழ் கட்டாயம்.. நிபந்தனைகளுடன் விண்ணப்பம் வெளியீடு
Author: Babu Lakshmanan3 January 2024, 11:35 am
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணிக்காக கால்நடைத்துறை சார்பில் புகைப்பட அடையாளச் சான்று விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் தைத்திங்கள் முதல் நாள் தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதனைத் தொடர்ந்து, மதுரையின் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு போன்ற பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கான காளைகள் அடையாளப்படுத்தும் விதமாக கால்நடைத்துறை சார்பில் தகுதிச் சான்று வழங்க விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. இணைய வழி மூலம் விண்ணப்பத்தினை தரவு செய்து ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடு திமில் தெரியும் வகையிலும், மாட்டின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் உடன் புகைப்படத்துடன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் கொடுத்து மாட்டிற்கான தகுதியை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலப்பின மாடுகளுக்கு பங்கேற்க அனுமதியில்லை எனவும், நாட்டு மாடுகளுக்கு மட்டுமே பங்கேற்க அனுமதியென விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வரும் காளைகளின் உரிமையாளர்கள் நடப்பு 2024 ஆம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு மாடு மற்றும் நாட்டின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் உடன் கூடிய புதிய புகைப்படமும், ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு போதை வஸ்துகள் தரமாட்டேன் மற்றும் துன்புறுத்த மாட்டேன் என்று உறுதிமொழி பதிவு செய்து வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், கால்நடைத்துறை சார்பில் வெளியிட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைகளில் ஜல்லிக்கட்டு காளைகளை தரப் பரிசோதனை செய்வது அவசியம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.