ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் கோவை மாணவி சாதனை : 100க்கு 99.998 மதிப்பெண் பெற்று தமிழகத்தில் முதல் இடம் பிடித்து அசத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 July 2022, 3:40 pm

ஜே.இ.இ. முதல் நிலைத்தேர்வில் கோவையை சேர்ந்த மாணவி தீக்‌ஷா தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மத்திய பொறியியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஐடி, என்ஐடி போன்ற உயர் தொழில் நுட்ப கல்வி நிறுவனங்களில் இளநிலைப் பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளில் சேருவதற்கு ஜேஇஇ எனப்படும் நுழைவுத் தேர்வு முதல் நிலை மற்றும் முதன்மை என இருகட்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

முதல்நிலை தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி. ஐஐஐடி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் தகுதியை பெறுவார்கள். இதற்காக நடத்தப்படும் முதல்நிலை தகுதி தேர்வில் வெற்றி பெறுபவர்களில் முதல் இரண்டரை லட்சம் பேர் முதன்மை தேர்வை எழுதலாம். இந்த முதன்மை தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.

முதற்கட்டமாக நடத்தப்பட்ட முதல்நிலை தேர்வை 7 லட்சத்து 69 பேர் எழுதினர். இதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது. இதில் கோவையைச் சேர்ந்த தீக்‌ஷா திவாகர் என்ற மாணவி 100-க்கு 99.998 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

கோவை காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா பிப் பள்ளியில் பயின்ற மாணவிக்கு பள்ளி சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.இதில் பள்ளியின் தாளாளர் சுகுணா லட்சுமி,மற்றும் சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி மற்றும் மாணவியின் பெற்றோர் ஆகியோர் கலந்து மாணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

சாதனை படைத்த மாணவி தீக்‌ஷா திவாகர் கூறுகையில் தேர்வு கடினமாக இருந்த போதும் முக்கிய விடைகளைப் பார்த்ததும், அதிக மதிப்பெண்கள் எடுப்பேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இப்போது கிடைத்துள்ளது மிக மகிழ்ச்சி என்றார். மேலும் இந்த சாதனை புரிய உதவிய எனது பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் என அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவிப்பதாக கூறினர்.

  • Serial Actor Who Got Divorce from his wife விவாகரத்து கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்!
  • Views: - 677

    0

    0