திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் கொள்ளை : மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan24 June 2022, 9:42 pm
திருப்பூர்: ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை மற்றும் 1.50 லட்சம் பணம் கொள்ளை. மர்ம நபர்கள் குறித்து மத்திய போலீசார் விசாரணை.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அமர்சிங் (வயது 54) இவர் திருப்பூர் ஏ.பி.டி சாலை பகுதியில் குடியிருந்து வருகிறார். மேலும் இவர் திருப்பூரில் ஜவுளி கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அமர்சிங் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை கேரளாவிற்கு சென்றுள்ளார். மீண்டும் இன்று மாலை திரும்பிய போது வீட்டு கதவின் தாழ் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்களால், பீரோ கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 18 சவரன் நகை மற்றும் 1.50 லட்சம் ரூபாய் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து உடனடியாக மத்திய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும் கொள்ளை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.