பிரபல நகைக்கடையில் ஒரே இரவில் நகைகள் சுருட்டல்.. கடையை காலி செய்த உரிமையாளர் : விசாரணையில் ஷாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 January 2023, 8:34 pm

நகைக்கு வட்டி இல்லா கடன், தங்க நகை சிறு சேமிப்பு திட்டம் என பல கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம், கோடிக்கணக்கில் ஏமாற்றிய நகைக்கடை உரிமையாளரின் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில், அசோகன் ஆபரண மாளிகை செயல்பட்டு வந்தது.

இங்கு நகை சிறுசேமிப்பு திட்டம், மற்ற வங்கிகளில் உள்ள அடமானம் வைத்த நகைக்களை மீட்டு, வட்டி இல்லா கடன் வழங்கப்படும் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்கள் அறிவிக்கப்பட்டது. இதனால், ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்து இருந்தனர்.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் ஒரத்தநாடு கிளையில், ஒரு சிலர் அடமானம் வைத்த நகைகளை மீட்க சென்றுள்ளனர். அப்போது, கடையிலுள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அனைத்தையும் கடை ஊழியர்கள் எடுத்துக்கொண்டு காலி செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

இத்தகவல் அப்பகுதியில் பரவியதையடுத்து பாதிக்கப்பட்ட நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் கடையை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாதிக்கப்பட்டவர்களிடம் பேசி, புகார் அளிக்க நடவடிக்கை எடுத்தனர்.

இதையடுத்து ஒரத்தநாட்டில், பாதிக்கப்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர், அசோகன் ஆபரண மாளிகை உரிமையாளர் மீது நேற்று புகார் அளித்து வருகின்றனர்.

இதே போல், பட்டுக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் பகுதியில் உள்ள கடைகள் பூட்டப்பட்டதால், அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிகளில், புகார் அளிக்க பலரும் குவிந்து வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என போலீஸ் தரப்பில் பிளக்ஸ் வைத்துள்ளனர்.

மேலும், திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர் கடைகள் முன்பு, பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட தரப்பில் கூறியதாவது; தினமும் 100 ரூபாய் கட்டினால், ஒரு ஆண்டுக்கு போனஸ் தொகையுடன் 39,000 வழங்கப்படும். மற்ற வங்கிகளில் வைத்துள்ள நகை கடன்களுக்கு, நீங்கள் வட்டி கட்ட வேண்டும்.

ஆனால், எங்கள் கடைகளில் நகைகளை மூன்று ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நகைகளை அடகு வைத்தால் வட்டி கிடையாது எனவும், நகை சீட் கட்டும் நபருக்கு குலுக்கலில் மனை வழங்குவதாகவும் என பல அறிவிப்புகளை நம்பி நாங்கள் ஏமாந்துள்ளோம்.

இதை நம்பி நாங்கள் கட்டிய சீட், மற்றும் அடமானம் வைத்த நகைகள் என கோடிக்கணக்கில் மேசாடி செய்துள்ளனர். இது குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்தி, பணத்தையும், நகையையும் மீட்டு தர வேண்டும் இவ்வாறு தெரிவித்தனர்.

கடையின் உரிமையாளர் கடந்த 15 நாட்களுக்கு முன்பாக, நான்கு கடைகளில் உள்ள பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளதாக போலீஸ் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • Manikandan interview highlights ‘தொலைச்சுப்புடுவேன்’ உன்னை…மணிகண்டனை மிரட்டிய பிரபல நடிகர்…எதற்குனு தெரியுமா..!