19 வயதில் ராணுவத்தில் இணைந்து… 46 வயதில் சொந்த ஊருக்கு திரும்பிய ராணுவ கேப்டனுக்கு உற்சாக வரவேற்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
1 January 2024, 5:00 pm

19 வயதில் ராணுவத்தில் இணைந்து… 46 வயதில் சொந்த ஊருக்கு திரும்பிய ராணுவ கேப்டனுக்கு உற்சாக வரவேற்பு!!

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே, முத்துலாபுரம் கிராமத்தில், விவசாயி ராஜு, கருப்பாயம்மாள் தம்பதியினருக்கு, மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களது, மூன்று மகன்களும் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்துள்ளனர்.

இதில் முதல் மகன் கண்ணன் (வயது, 46) இவர், கடந்த 1995-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தனது 19 வயதில், இந்திய ராணுவத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

அங்கு கார்கில், ஜம்மு காஷ்மீர் பகுதியில், இந்திய ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், திங்கள்கிழமை தனது, 28 ஆண்டுகால இந்திய ராணுவ பணியை முடித்துக் கொண்டு, சொந்த ஊரான, வத்தலகுண்டு அருகே உள்ள, முத்துலாபுரத்திற்கு வந்தார்.

அவரை, பெற்றோர்கள், உறவினர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும், ஊர் எல்லையில் இருந்து வான வேடிக்கையுடன், மாலை, சால்வை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று, வரவேற்றனர். பின்னர், ஊர் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி, இவரது வருகையை கொண்டாடினர்.

ஊர் எல்லையில் இருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, அவருடைய குடிசை வீட்டில் அவர் பெற்றோர் ஆரத்தி எடுத்து, கண்ணீர் மல்க வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், தேவேந்திர குல மக்கள் இயக்கம் மாவட்ட செயலாளர் உத்திரப்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மேலும், கிராம பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்கள், இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கள் கலந்து கொண்டு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இதுகுறித்து, இந்திய ராணுவ வீரர், கேப்டன் கண்ணன் குறுகையில், எனது 19 வயதில் எனது நாட்டுக்காகவும், இந்திய நாட்டை பாதுகாத்திடவும் ராணுவத்தில் சேர்ந்து கடுமையாக உழைத்து, தற்போது கேப்டனாக சொந்த ஊருக்கு திரும்பி உள்ளேன். இதே போல் ஒவ்வொரு இளைஞனும் நாட்டுக்காக போராட பாடுபட வேண்டும் என, கூறினார்.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!