திமுகவினரால் தாக்கப்பட்ட செய்தியாளர் மீது பெண் வன்கொடுமை பிரிவில் வழக்குப்பதிவு… செய்தியாளர்கள் தர்ணா போராட்டம்..!!!
Author: Babu Lakshmanan2 மார்ச் 2024, 9:23 காலை
செய்தியாளர் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போதைப்பொருள் கடத்தலுக்கு சென்னையை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவர் மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. கடந்த 3 ஆண்டுகளில் அவர்கள் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி போதைப்பொருட்களை கடத்தி இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தி.மு.க.வில் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாபர் சாதிக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர், அவர் தலைமறைவாகினார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது
இதனிடையே, நுங்கம்பாக்கத்தில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில் மீது திமுக நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, திமுக மேற்கு மாவட்ட நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒளிப்பதிவாளர் செந்தில் மற்றும் செய்தியாளர் மீது பெண் வன்கொடுமை பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரின் இந்த செயல் சக செய்தியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று இரவு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இன்று மாலை காவல் ஆணையர் சந்தித்து பேசுவதாக உறுதியளித்ததன் பேரில், போராட்டம் கைவிடப்பட்டது.
0
0