பட்டியலின மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்த சக மாணவர்கள் ; திருச்சி தேசிய சட்டப் பல்கலை.,யில் அதிர்ச்சி
Author: Babu Lakshmanan19 January 2024, 11:47 am
திருச்சி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பட்டியலின மாணவருக்கு, அவரது வகுப்பு மாணவர்கள் சிறுநீர் கலந்த குளிர்பானம் கொடுத்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர் அடுத்துள்ள நவலூர் குட்டப்பட்டில் செயல்பட்டு வரும் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில், ஒரே வகுப்பில் 3 மாணவர்கள் இளங்கலை சட்டப்படிப்பு இறுதியாண்டு பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி இரவு பட்டியலின மாணவருக்கு, சக மாணவர் இருவர் குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
இருவரில் ஒருவர் பட்டியலினத்தை சேர்ந்த மாணவர், மற்றொருவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை (MBC) சேர்ந்த மாணவர் ஆவார்கள். மறுநாள் வகுப்பில் குளிர்பானத்தில் சிறுநீரை கலக்கிக் கொடுத்த இச்சம்பவத்தை சொல்லி அந்த மாணவனை கேலி, கிண்டல் செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவன் இது குறித்து தனது பேராசியர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். இப் புகார் குறித்து பேராசிரியர்கள், பல்கலை பதிவாளர் மற்றும் துணைவேந்தரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து, இச்சம்பவத்தை குறித்து விசாரணை மேற்கொள்ள 3 உதவிப் பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
விசாரணைக்கு பின்னர் உதவிப் பேராசிரியர்கள் குழுவினர் ‘ராகிங் செய்யும் நோக்கில் தான் 2 மாணவர்களும் நடந்துக் கொண்டுள்ளனர்’ என்று அறிக்கை தாக்கல் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த அறிக்கையின் அடிப்படையில், பல்கலைக்கழக பதிவாளர் பாலகிருஷ்ணன் சிறுநீரை குளிர்பானத்தில் கலந்து கொடுத்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 மாணவர்கள் மீது திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பதிவாளர் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சம்பவம் குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இச்சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 2 மாணவர்களும் தற்காலிகமாக கல்லூரியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ராக்கிங்கில் ஈடுபடக்கூடாது என நிர்வாகம் தெரிவித்தும் பல்வேறு கல்லூரிகளில் இந்த ரேக்கிங் நடைபெற்று வருகிறது. கல்லூரிகளில் நடவடிக்கை எடுத்துக்கொண்டு தான் வருகிறார்கள். இந்நிலையில் திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிலும் 2 மாணவர்கள் விளையாட்டுத்தனமாக செய்த ராக்கிங்கால் தற்போது அவர்களது எதிர்காலமே கேள்விக்குறியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.