திராவிடம் என்ற சொல்லை கேட்டாலே ஆளுநருக்கு எரிகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan31 July 2023, 2:30 pm
தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒழுங்காக ஒப்புதல் அளிப்பதற்கு பதிலாக மற்ற அனைத்துச் செயல்களையும் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சனாதனம் குறித்த தனது ஆய்வை தினமும் செய்துகொண்டு வருகிறார்.
திராவிடம் என்ற சொல்லைக் கேட்டாலே அவருக்கு எரிகிறது. திராவிடத்துக்கு எதிரான தனது வன்மம் நிறைந்த வார்த்தைப் போரைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்.
திராவிடம் பற்றிய பேச்சு பிரிவினையைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது என்று பொத்தாம் பொதுவாக அவர் சொல்வதை வெறும் புலம்பலாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும்.
திராவிடம் என்ற சொல் இன்று அது ஒரு அரசியல் கோட்பாட்டின் பெயராக இருக்கிறது. இதனைத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சொல்லி வருகிறார்கள்.
திராவிடம் என்ற அரசியல் கோட்பாட்டு தமிழின தலைவர் கலைஞர் போன்றவர்களால் கடந்த நூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட அரசியல் கருத்தியல் ஆகும்.
சாதி பேதமற்ற திராவிடர்கள் என்று அழைத்தவர் பண்டித அயோத்திதாசர். தமிழ் என்பதே அதனை உச்சரிக்க முடியாதவர்களால் திரமிள எனத் திரிந்து அழைக்கப்பட்டது என்பது மொழியியல் அறிஞர்கள் கருத்து என அந்த அறிக்கையில் விரிவாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.