திராவிட கட்சிகளுக்கு எதிராக சதி… 24ம் தேதி கோவை வரும் ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் ; தபெதிக அறிவிப்பு

Author: Babu Lakshmanan
23 August 2023, 9:46 am

தமிழக மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் தமிழக ஆளுநருக்கு எதிராக முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் என்று தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தெரிவித்துள்ளார்.

காந்திபுரம், பகுதியில் உள்ள தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கு.இராமகிருட்டிணன் கூறியதாவது:- தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்நாடு அரசால் ஒருமனதாக தீர்மானிக்கப்படுகின்ற நீட் தேர்விற்கு எதிரான மசோதாக்கள், ஆன்லைனுக்கு எதிரான மசோதாக்கள், இவற்றையெல்லாம் அனுமதிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போடுவதோடு மட்டுமல்லாமல், இவற்றையெல்லாம் நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று வெளிப்படையாகவும், தமிழ்நாட்டு மக்களுக்கே எதிராகவும் பேச துவங்கியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்த மசோதாக்களுக்கும் அவர் அனுமதி வழங்குவதில்லை. தற்பொழுது தமிழ்நாடு அரசின் கல்விக் கொள்கையில் மாநில அரசு வகுத்திருக்கக்கூடிய கல்வித் திட்டத்தை பல்கலைக்கழகங்கள் இயற்கை வேண்டிய அவசியம் இல்லை என வெளிப்படையாக பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தமிழ்நாடு கல்விக் கொள்கையை கூட வகுக்க முடியாத நிலைக்கு ஆளுநர் தள்ளுகிறார்.

அதேபோல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு குழுவிற்கு யாரை தலைவராக நியமிக்க வேண்டும் என்பதையும் தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க முடியாது என்ற நிலையில், தமிழக மக்களையும், தமிழ்நாட்டையும், ஆளுநர் வஞ்சித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் ஆளுநர் தடையாக இருக்கிறார்.

இந்நிலையில் வருகின்ற 24ம் தேதி கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழக பட்டம் அளிப்பு விழாவிற்கு ஆளுநர் வருகை புரிவாரானால், லாலி ரோடு பகுதியில் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்துவோம். தமிழ்நாடு திராவிட இயக்கங்களால் அடைந்துள்ள வளர்ச்சியை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல், அதனை தடை செய்ய வேண்டும் என்ற திட்டத்தோடு ஆளுநர் இயங்கிக் கொண்டிருக்கிறார்.

ஆளுநர் பாஜகவின் செய்தி தொடர்பாளர் போலவும், மாநில தலைவர் போலவும் இயங்கிக் கொண்டிருக்கிறார். பாஜகவின் திட்டங்களையும், நோக்கங்களையும் தமிழ்நாட்டில் நிறைவேற்றுவதும், பாஜகவை இங்கு வளர்ப்பதற்காகவும் தான், மக்கள் பணத்தில் உருவாகிய ராஜ் பவனில் அமர்ந்து கொண்டு பாஜகவில் ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

நீட் மசோதா தற்பொழுது ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டுள்ளது. அது பற்றிய கருத்தை ஜனாதிபதி தான் தெரிவிக்க முடியும், அதைப் பற்றி தமிழக ஆளுநர் பேச முடியாது. வேண்டுமானால் பாஜகவினர் மேடையில் ஆளுநர் அவரது கருத்துக்களை தெரிவிக்கலாம், என்றார்.

  • members in tn assembly discussed about kadhalikka neramillai movie இந்த படத்தை தடை செய்ய வேண்டும்! சட்டசபையில் எழுந்த விவாதம்- இப்படி எல்லாம் நடந்திருக்கா?