ஒன்னும் செய்ய முடியாது என்ற திமிரு… இன்னும் 6 மாதத்தில் அதுக்கு மட்டும் வாய்ப்பே இல்லை ; மத்திய அரசு மீது கி.வீரமணி சாடல்..!!!
Author: Babu Lakshmanan28 October 2023, 12:50 pm
வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும் திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே குலத் தொழிலை ஊக்குவிக்கும் விஸ்வகர்மா யோஜனா என்ற ஒன்றிய அரசின் திட்டத்தை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கலந்து கலந்து கொண்டார்.
பின்னர் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது :- 21ஆம் நூற்றாண்டில் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் நம்மை அப்படியே தலைகீழாக மாற்றுவது விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் நோக்கம். மீண்டும் பின்னோக்கி கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் போட்டி அரசியல் நடத்தி வருகிறார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வியை சந்திக்க உள்ளது. இந்தியா கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கப் போகிறது.
மேலும் விரைவில் நடக்கவுள்ள ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலிலும் பாஜக ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியைப் பிடிக்காது. நாடாளுமன்றத்தில் மகளிர் சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ள பாஜக, அதை எப்பொழுது செயல்படுத்தும் என்று தெரியாது. வரும் ஆனால் வராது என்பது போல் இந்த மசோதா உள்ளது.
உயர்கல்வியில் சேர மாணவர்களுக்கு நுழைத்தேர்வுகள் நடத்தி, அவர்களை மன அழுத்தத்திற்கு ஒன்றிய அரசு ஆளாக்கி வருகிறது. இதனால், அவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழகத்தில் மட்டுமல்ல பல்வேறு மாநிலங்களிலும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு எழுந்து வருகிறது. தமிழகத்தில் மகளிருக்கு கலைஞர் உரிமைத்தொகை மாதம் தோறும் வழங்கப்படுகிறது. தாய் வீட்டு சீதனம் போல் மாதம் ஆயிரம் ரூபாய் வீடு தேடி வருகிறது.
யார் நினைத்தாலும் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற திமிர் மத்திய அரசிடம் இருக்கிறது. புதிய நாடாளுமன்றத்தை கட்டிவிட்டு அனைத்து உறுப்பினர்களும் அழைத்து பெரிய மசோதாவை கொண்டு வரப் போகிறோம் என்று சொல்லி ஏமாற்றி விட்டனர், என அவர் பேசினார்.