கல்குவாரியில் கல்லை கட்டி வீசப்பட்ட கபடி வீரரின் சடலம் மீட்பு.. 10 ஆண்டுகளில் 3வது கொலை : போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
Author: Babu Lakshmanan10 February 2023, 7:19 pm
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே சிமெண்ட் தொழிற்சாலைக்கு சொந்தமான கல்குவாரியில் கல்லைக் கட்டி வீசி கொலை அழுகிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆலம்பாடி ஊராட்சி கொல்லப்பட்டி அருகே செட்டியூர் செல்லும் சாலையில் குஜிலியம்பாறை அருகே செட்டிநாடு சிமெண்ட் ஆலைக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இதில், சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு போலீசாரும் குஜிலியம்பாறை தீயணைப்புத் துறையினரும் சென்று கல்குவாரியில் மிதந்து கொண்டிருந்த சடலத்தை மீட்டனர் . சடலத்தை மீட்டதில் சுமார் 28,30 வயது மதிக்கத்தக்க இளைஞர் அடையாளம் தெரியாத நபர் என்பதும், ஒரு வாரத்திற்கு மேலாக கல்லை கட்டி வீசி இருக்கக்கூடும் என தெரிய வந்தது. மேலும், அவர் அணிந்திருந்த ஆடையில் ராம் பாய்ஸ் கபடி குழு காங்கயம் என்று எழுதப்பட்டுள்ளது.
குஜிலியம்பாறை வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் ஆய்வு செய்ததில், இங்கு செயல்பட்டு வரும் சிமெண்ட் ஆலைக்கு சொந்தமாக ஆலம்பாடி, மல்லபுரம், கோட்டநத்தம், சேர்வைக்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது என்றும், இன்று இளைஞரை கல்லை கட்டி கொலை செய்யப்பட்ட கல்குவாரியில், கடந்த 10 ஆண்டு காலமாக ஒரு இளம் பெண் உள்பட மூன்று பேர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது.
அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலத்தை உடல்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.