போலீஸ் உடையில் இளம்பெண் கடத்தல்… கத்தியை காட்டி மிரட்டி கூட்டு பலாத்காரம் ; தப்பியோட முயன்ற குற்றவாளிகள் மீது துப்பாக்கிச்சூடு..!!

Author: Babu Lakshmanan
16 January 2023, 4:07 pm

காஞ்சிபுரம் ; கடந்த மாதம் ஸ்ரீபெரும்புதூர் அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு நபர்கள் 3 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட நிலையில், இன்று தப்பி ஓட முயற்சி செய்ததாக கூறி காவல்துறையினர் ஒருவரை முட்டிக்கு கீழே ஒரு ரவுண்டு துப்பாக்கி சூடு நடத்தியது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமங்கலம் கிராமத்தில், கடந்த டிசம்பர் மாதம் 11ஆம் தேதி இரவு சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் இரவு உணவு முடித்து எம்ஜிஆர் நகரில் உள்ள வீட்டிற்கு திரும்பியபோது, ​போலீஸ் சீருடையில் வந்த இருவர், இருசக்கர வாகனத்தில் தன்னைத் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வரும்படி அழைத்தனர்.

அவர்களை போலீசார் என நம்பி, அவர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று போது வடமங்கலம் என்ற இடத்தில் தனிமையான இடத்தில் வாகனத்தை நிறுத்தி, கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் வீட்டுக்கு வந்து காவலன் செயலியில் புகார் அளித்தார் . இந்திய தண்டனைச் சட்டத்தின் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் உத்தரவிட்டார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், குற்றவாளிகளைப் பிடிக்க ADSP‌ சாந்தாராம், டிஎஸ்பி சுனில், காஞ்சிபுரம் டிஎஸ்பி ஜூலிய சீசர், மாவட்ட தனிப்படை என சுமார் 30 பேர் கொண்ட ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

20 வயது இளம் பெண்ணை பாலியல் கொடுமை செய்த காமுகர்கள் இருவரையும் தனிப்படை போலீஸார் தேடி வந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சுண்ணாம்புக்குளம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த நாகராஜ் (வயது 31), பிரகாஷ் (31) ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் 12.01.2023 அன்று பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நாகராஜ் மற்றும் பிரகாஷை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஏற்கெனவே இருவர் மீதும் திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு, அரக்கோணம் காஞ்சிபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 8க்கும் மேற்பட்ட வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

காஞ்சிபுரம் பெரியார் நகரிலும் பெண் ஒருவரை பாலியல் தொந்தரவு செய்ததாக தாலுகா காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் காவலர்கள் என்று சொல்லி பல பெண்களை விசாரணைக்கு அழைப்பதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் தெரியவந்தது.

இதற்கிடையே, கைதான நாகராஜ் மற்றும் பிரகாஷ் ஆகியோர்களை விசாரணைக்காக அழைத்துச்சென்றபோது இருவரும் கீழ்கதிர்பூர் பகுதியில் போலீஸாரிடம் இருந்து தப்பியோட முயன்றதாகவும் (கற்பனை) தனிப்படை போலீஸார் நாகராஜின் வலது காலில் முழங்காலுக்கு கீழே ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறப்படுகிறது. .

மேலும், போலீஸாரிடம் இருந்து தப்பியோடிய பிரகாஷ் கீழே தடுக்கி விழுந்ததில் வலது காலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இருவரையும் மீட்ட போலீஸார் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர், அவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு காயமடைந்த இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் கூட்டு கற்பழிப்பு சம்பவம் சட்ட பேரவையில் எதிரொலிக்கும் என்பதை கருத்தில் கொண்ட மாவட்ட காவல் துறையினர், மூன்று நாட்களுக்கு முன்பே கைது செய்யப்பட்டு விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல் சுமார் 144 மணி நேரம் போலீஸ் கஸ்டடியிலேயே வைத்துக் கொண்டு இருந்து விட்டு நேற்று இரவு துப்பாக்கி சூடு நடத்தி காவல்துறை சட்ட ஒழுங்கை பாதுகாத்து வருகின்றது என்பதை போலியாக நிரூபிக்க முயற்சித்தனர் என்பதே உண்மை என்பதை விபரம் தெரிந்த சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

காஞ்சிபுரம் அடுத்துள்ள குண்டு குளம் பகுதியில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமையில் சம்பந்தப்பட்ட இளைஞர்களில் மூன்று பேருக்கு காலில் பல இடங்களில் எலும்பு முறிவும், இரண்டு இளைஞர்களுக்கு கைகளில் எலும்பு முறிவும் ஏற்பட்டு உள்ளதை (உடைக்கப்பட்டு) காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை எக்ஸ்ரே ரிப்போர்ட் கூறுகிறது. இவர்களை ஏன் என்கவுண்டர் செய்யவில்லை என பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் பெற்றோர்கள் கேட்கின்றனர்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…