சிபிஐக்கு மாறிய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கு.. பொங்கியெழுந்த அண்ணாமலை!
Author: Hariharasudhan20 November 2024, 2:17 pm
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட நிலையில், இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஜூன் 19ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் மொத்தம் 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் உயிரிழந்த நிலையில், 161 பேர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
பின்னர், இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாராயம் விற்பனை செய்தவர்கள் உள்ளிட்ட 24 பேரைக் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இதனிடையே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்தால் உண்மைக் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காது எனவும், அதனால் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அதிமுக, பாமக, பாஜக மற்றும் தேமுதிக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் மீதான வாதங்கள் நிறைவடந்த நிலையில், இன்று (நவ.20) நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது. இதன்படி “சமுதாயத்தில் எந்த மாதிரியான பிரச்னைகள், தீங்குகள் மதுவால் ஏற்படும் என்பதற்கு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணச் சம்பவங்கள் ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது.
போலீசாருக்கு தெரியாமல் கள்ளச்சாராய மரணங்கள் நடந்தது என்பதை ஏற்க முடியவில்லை. மாநில காவல்துறை கண்டும் காணமாலும் இருந்துள்ளதை இச்சம்பவம் தெளிவாக காண்பிக்கிறது. அதேநேரம், போலீஸ் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்பப் பெற்றது தவறு.
சிபிசிஐடி விசாரணை ஆவணங்கள் அனைத்தையும் சிபிஐ வசம் வழங்க வேண்டும், தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிபிசிஐடி நடத்திய விசாரணை அறிக்கையை சிபிஐ வசம் 2 வாரத்தில் ஒப்படைக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இது தொடர்பாக பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்ட வல்லுநர்கள் ஆகியோர் உடன் ஆலோசித்து முடிவெடுப்பார். சில கட்சிகள் சிபிஐ விசாரணை கோரியதை அரசியலாகத்தான் பார்க்க முடியும். விஷச்சாராய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட யாரும் சிபிஐ விசாரணை கேட்கவில்லை” என்றார்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால், கள்ளக்குறிச்சியில் 68 உயிர்கள் கள்ளச்சாராயத்திற்குப் பலியான வழக்கு தொடர்பாக, தமிழக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசின் காவல்துறைக்குத் தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும், மாவட்ட காவல்துறை, கள்ளச்சாராய விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான், இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும், கள்ளச்சாராயம் தொடர்பாக, திமுக அரசுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வகுப்பறையில் ஆசிரியைக்கு கத்திக்குத்து.. திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரச் செயல்!
கள்ளச் சாராய விற்பனையையும் கண்டு கொள்ளாமல், வழக்கு விசாரணையையும் மெத்தனப் பொக்கில் கையாண்டு, உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் போக்கில் திமுக அரசு செயல்பட்டு வந்திருப்பது, சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துக்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்குக் கொட்டு வைத்திருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 68 உயிர்கள் பலியானதை மூடி மறைத்து, வழக்கைத் திசைதிருப்ப முயன்ற திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.