கள்ளக்குறிச்சி வன்முறை… .காவல்துறை மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி : மாணவியின் உடலை மறுகூராய்வு செய்ய உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2022, 1:21 pm

கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளகுறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவியின் உயிரிழப்பை கண்டித்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்களில் ஏற்கனவே 300க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மாணவியின் மர்ம மரணம் தொடர்பாக பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் மற்றும் 2 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, மாணவி மர்ம மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். பள்ளி மாணவி மரண வழக்கை முதல் வழக்காக விசாரிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதன்படி, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மாணவி மரணம் பற்றி வழக்கு தொடர்ந்து பிறகு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன்? என்றும் போராட்டம் நடத்த அனுமதி அளித்தது யார்? எனவும் மாணவியின் தந்தைக்கு நீதிபதி சதீஷ்குமார் அடுக்காக பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.

வெளிநாட்டில் இருந்து 14-ஆம் தேதிதான் வந்தார். வன்முறைக்கும், பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் டிசியை எரிக்க உரிமை அளித்தது யார் என்றும் வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார். சின்னசேலத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை என்பது போல் தெரிகிறது எனவும் நீதிபதி கருத்து கூறினார். திடீர் கோபத்தால் வெடித்த வன்முறையல்ல, திட்டமிட்ட சம்பவம் எனவும் குறிப்பிட்டார்.

காவல்துறை யார் கட்டுப்பாட்டிலும் இல்லை, சட்டத்தை முறையாக அமல்படுத்தவில்லை என குற்றசாட்டினார். உளவுத்துறை அறிக்கை என்ன சொல்கிறது? சிலர் மட்டுமே இந்த வன்முறைக்கு காரணமல்ல என உயர்நீதிமன்றம் நீதிபதி கூறியுள்ளார்.

அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்ததாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே, யாரையும் பாதுகாக்கும் நோக்கம் இல்லை, எப்ஐஆர் மாற்றப்படுகிறது என நீதிமன்றத்தில் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வன்முறை சம்பவத்தை பொறுத்தவரை விசாரணையை நீதிமன்றமே கண்காணிக்கும் என நீதிபதி சதீஷ்குமார் கூறினார். வன்முறையாளர்களை கண்டறிய சிறப்புப்படை அமைத்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் கல்வி நிலையங்களில் மரணம் நிகழ்ந்தால் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவியின் உடலை 3 மருத்துவர்கள் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உடல் மறுகூராய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவியின் தந்தை தனது வழக்கறிஞருடன் உடல் மறு கூராய்வு போது உடனிருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவியின் இறுதி சடங்கு அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
உடல் கூராய்வுக்கு பிறகு மாணவியின் உடலை எதிர்ப்பின்றி பெற்றுக்கொள்ளவேண்டும் என தந்தைக்கு நீதிமன்றம் ஆணையிட்டது. கலவரத்திற்கு யார் காரணம் என்பதை புலன் விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

  • Jailer 2 movie teaser TRENDING NO1-ல் ஜெயிலர் 2…யூடியூப்பை தெறிக்கவிட்ட படத்தின் டீசர்..!