கள்ளக்குறிச்சி +2 மாணவி உயிரிழந்த விவகாரம் : மாணவியின் தந்தை வைத்த கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 ஜூலை 2022, 2:37 மணி
HC Reject - Updatenews360
Quick Share

கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறு கூராய்வில் மாணவியின் தந்தையின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை என்பது போல் தெரிகிறது என்றும் வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

வன்முறை சம்பவத்தை பொறுத்தவரை விசாரணையை நீதிமன்றமே கண்காணிக்கும். வன்முறையாளர்களை கண்டறிய சிறப்புப்படை அமைத்து விசாரணை நடத்தி சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எதிர்காலத்தில் கல்வி நிலையங்களில் மரணம் நிகழ்ந்தால் சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவியின் உடலை 3 மருத்துவர்கள் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உடல் மறுகூராய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாணவியின் தந்தை மற்றும் தனது வழக்கறிகருடன் உடல் மறு கூராய்வு போது உடனிருக்க அனுமதி அளிக்கப்பட்டது.

உடல் கூராய்வுக்கு பிறகு மாணவியின் உடலை எந்த எதிர்ப்பின்றி பெற்றுக் கொள்ளவேண்டும் என தந்தைக்கு நீதிமன்றம் ஆணையிட்டது. கலவரத்திற்கு யார் காரணம் என்பதை புலன் விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாணவி மறு உடல் கூராய்வில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என்ற தந்தையின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்.

மாணவியின் உடலை மறு கூராய்வு செய்யும் குழுவில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என தந்தை ராமலிங்கம் தரப்பு முறையிட்டிருந்த நிலையில், நிராகரிக்கப்பட்டது. கிரிமினல் விவகாரங்களில் தலையிட அதிகாரமில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, மோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேலும் தனிநீதிபதி உத்தரவில் மேல்முறையீடு வேண்டும் என்றால் உச்சநீதிமன்றத்தை தான் அணுக வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 649

    1

    0