கல்லட்டி சோதனை சாவடியை வைத்து கல்லா கட்டும் உள்ளூர் ஓட்டுநர்கள்… வெளிமாநில வாகனங்கள் வந்தால் ஜாக்பாட்… உதகையில் பகீர்..!!
Author: Babu Lakshmanan5 October 2023, 2:36 pm
பிற மாநில வாகனங்கள் சோதனை சாவடியை கடக்க ரூ.1000 வசூலிக்கும் உள்ளூர் ஓட்டுநர்களின் தில்லாலங்கடி வேலை அம்பலமாகியுள்ளது.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் உதகைக்கு கல்லட்டி மலை பாதை வழியாகவும், உதகையிலிருந்து கர்நாடகா, கேரளா செல்லவும் இந்தக் கல்லட்டி மலைப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.
ஆபத்தான இந்த மலைப்பாதை சுமார் 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இந்த அபாயகரமான கல்லட்டி மலை பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் விபத்தில் சிக்கி பல மனித உயிர்களும் பலி ஆகி உள்ளது. விபத்து மற்றும் உயிர் சேதங்களை தவிர்க்க, வெளி மாநில மற்றும் வெளியூர் பதிவு கொண்ட வாகனங்களை இந்த மலைப்பாதை வழியாக இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
மேலும், தலைகுந்தா பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உதகையில் உள்ள சில சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் புது யுக்தியை கையாண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக, வெளிமாநிலம் மற்றும் வெளியூர் பதிவு எண் கொண்ட வாகனங்களை, உள்ளூர் வாகன ஓட்டிகள் தங்களது வாகன உரிமத்தை காட்டி, வெளி மாநில வாகனங்களை கல்லட்டி வாகன சோதனை சாவடியை கடந்த பின், அங்கிருந்து சுற்றுலா பயணிகளிடம் வாகனத்தை ஒப்படைத்துவிட்டு மீண்டும் தலைக்குந்தா பகுதிக்கு வந்து விடுகின்றனர்.
இவ்வாறு ஒரு முறை கல்லட்டி வாகன சோதனைச் சாவடியை கடக்க ரூபாய் ஆயிரம் பெற்றுக் கொள்வதாக உள்ளுர் வாகன ஓட்டுனர் ஒருவர் தனது வாயாலேயே கூறி மாட்டிக்கொண்ட சம்பவம் தற்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு கல்லட்டி வாகன சோதனை சாவடியை கடந்த பின் மீண்டும் சுற்றுலா பயணிகளிடம் வாகனத்தை கொடுத்து விட்டு வேறு வாகனத்தில் அந்த டிரைவர் திரும்பி வந்து விடுகிறார். இங்கே தான் பிரச்சனையே உள்ளது.
கல்லட்டி சோதனை சாவடியை தாண்டிய பின்பு தான் ஆபத்து நிறைந்த பயணம் துவங்கும். இங்கிருந்து சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை இயக்குவதால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் சேதங்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை, இவ்வாறு செயல்களில் ஈடுபடும் உள்ளூர் வாகன ஓட்டுனர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.