புறம்போக்கு நிலத்தை காட்டச் சொல்லி விஏஓவுக்கு மிரட்டல் ; கணவருடன் தலைமறைவான திமுக பெண் கவுன்சிலர்.. வைரலாகும் வீடியோ!!
Author: Babu Lakshmanan30 November 2022, 9:13 am
ஊத்துக்காடு கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த வீடியோ வைரலான நிலையில், திமுக ஊராட்சி மன்ற பெண் தலைவர் மற்றும் கணவர் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சியில் சுமார் 4500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 9 வார்டு உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஊராட்சியில் ஊத்துக்காடு அம்மன் கோவில் மிகவும் பிரபலமானதாகும்.
ஊத்துக்காடு ஊராட்சியை சுற்றியுள்ள பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்குள்ள தொழிற்சாலைகளில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பணி புரிகின்றார்கள்.
ஆறு வழி சாலையை ஒட்டியுள்ள இந்த ஊத்துக்காடு ஊராட்சிக்கு, இங்குள்ள தொழிற்சாலைகளாலும், பக்தர்களாலும் அதிக வருமானம் வருவதால், கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கட்சியை சேர்ந்த டி.எல்.மணிகண்டன் என்பவர் இந்த ஊராட்சியை எப்படியாவது கைப்பற்றியாக வேண்டும் எனத் திட்டமிட்டு, தனது மனைவி சாவித்திரி மற்றும் தனது அம்மா ஜெயலட்சுமி லோகநாதன் ஆகியோர்களை தேர்தலில் போட்டியிட செய்து, மனைவி சாவித்திரி மூலம் ஊத்துக்காடு ஊராட்சியை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
பெயருக்கு மட்டுமே சாவித்திரி மணிகண்டன் (42) ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். திமுக கட்சியை சேர்ந்த இவரது கணவர் மணிகண்டன்தான் மனைவிக்கு பதில் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வருவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர். தனது மனைவி ஊராட்சி மன்ற செயலாளராக பொறுப்பேற்று கொண்ட முதல் நாளிலிருந்தே டிஎல்.மணிகண்டனின் அட்டகாசம் தலைவிரித்து ஆடுவதாக வார்டு உறுப்பினர்கள் கதறுகிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழா சிறப்பு கிராம சபா கூட்டத்தில் 9 வார்டு உறுப்பினர்களும் டி.எல்.மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதல் தீர்மானம் இயற்றினார்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர் ஆகியோர்களின் அனுமதி பெறாமலேயே அங்கிருந்த இ சேவை மையம் கட்டிடத்தை கைப்பற்றி சொகுசு பங்களா போல் மாற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டார்.
அதேபோல், ஊராட்சி மன்ற அலுவலகத்தை கிராம நிர்வாக அலுவலகமாக மாற்றிவிட்டார், கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை அஞ்சல் அலுவலகமாக மாற்றிவிட்டார். மாவட்ட நிர்வாகத்துக்கு எந்தவிதமான தகவலும் அளிக்காமல் இவர் செய்த செயல்கள் ஊராட்சி சட்டங்களை மீறியதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
அங்கு உள்ள அரசு மதுபானக் கடையில் விற்பனையாகும் ஒரு மதுபான பாட்டலுக்கு ஐந்து ரூபாய் வீதம் மாதம் 50 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் கமிஷன் கேட்டு மிரட்டி வருகிறார் என கூறி மதுபான கடையின் மேற்பார்வையாளர் ஆறுமுகம் என்பவர் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்து சிஎஸ்ஆர் காப்பி பதிவு செய்துள்ளார்.
ஊத்துக்காடு ஊருக்குள் தனியார் நிறுவன பேருந்துகள் வரக்கூடாது என தடை விதித்து விட்டு நிறுவனத்திடம் பணம் கேட்டுள்ளதாக வார்டு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். அங்குள்ள 15 க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் லட்ச கணக்கில் பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்துக்காக 2.34 ஏக்கர் அரசு புறம்போக்கு இடத்தை சிப்காட் தொழிற்பேட்டைக்காக வழங்க ஊராட்சியில் தீர்மானம் இயற்ற சொல்லி பலமுறை மாவட்ட நிர்வாகம் கூறிய போதும், ஊராட்சி நிர்வாகத்தில் மணிகண்டன் தலையிட்டு தீர்மானம் ஏதும் இயற்றாமல், EICKHOFF WIND ASIA PVT LTD என்ற தனியார் நிறுவன உரிமையாளர் ஜெயகுமார் அவர்களிடம் தீர்மானம் போடுவதற்காக 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டி உள்ளதாக தகவல் கசிந்து வெளியானது.
இந்நிலையில் கடந்த பத்து தினங்களுக்கு முன்பாக அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள 2.34 ஏக்கர் நிலம் எங்கு உள்ளது என காண்பிக்க வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலரிடம் ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரியும், அவருடைய கணவர் மணிகண்டனும் கேட்டுள்ளனர். நில அளவை அலுவலரை சந்திக்க கிராம நிர்வாக அலுவலர் புருஷோத்தமன் கூறியுள்ளார்.
இதனால், ஆவேசமடைந்த ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மற்றும் அவருடைய கணவர் மணிகண்டன் ஆகியோர், விஏஓவை அசிங்கமான வார்த்தைகளால் திட்டி அடிக்க சென்று கொலை மிரட்டல் விடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் மிக வைரலாக பரவி வருகின்றது.
அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து, மிக அசிங்கமான வார்த்தைகளால் பேசி,கொலை மிரட்டல் விடுத்த திமுக கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற பெண் தலைவர் சாவித்திரி மீதும், அவருடைய கணவர் மணிகண்டன் மீதும் ஜாமில் வெளிவர முடியாத மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தம்பதிகளை வாலாஜாபாத் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
ஊராட்சி மன்ற தலைவர் அவர்களின் கணவர் மற்றும் அவர்களின் உறவினர்கள் யாரும் ஊராட்சி மன்ற பணியில் ஈடுபடக் கூடாது என்றும், மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றாமல் செயல்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற கூட்டங்களில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் அனைத்தையும் ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே பலமுறை எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியும், அதையும் பொருட்படுத்தாமல் அனைத்து விஷயங்களிலும் டிஎல்.மணிகண்டன் தலையிடுவதால் அப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
ஏற்கனவே மணிகண்டன் மீது 18.10.2021 அன்று கிருஷ்ணமூர்த்தி என்பவரும், 17 .12 .2021 அன்று விஜயகுமார் என்பவரும், 09.11.2021 அன்று சத்யா என்பவரும், 09 11 21 அன்று கோகுல கிருஷ்ணன் என்பவரும், 5.04.2022 அன்று நெடுஞ்சாலை உதவி பொறியாளர் பிரியா ரஞ்சினி அவர்களும், 18.11.22 அன்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கமும் என பத்துக்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் நிலுவையில் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் 08.04.2022 அன்று ட்ரான்ஸ் என்டர்பிரைசஸ் மேலாளரை அடித்ததாக ஒரு எஃப்ஐஆர் வழக்கும், 17.05.2002 அன்று ராதாகிருஷ்ணன் என்பவரை அசிங்கமா பேசி கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக ஒரு எஃப்ஐஆர் வழக்கும், 19.11.2022 அன்று கிராம நிர்வாக அலுவலர் விஏஓ புருஷோத்தமனை தாக்க முற்பட்டு அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி மன்ற பெண் தலைவர் சாவித்திரி மீதும், அவருடைய கணவர் மணிகண்டன் மீதும் 294, 353 ,506(1) ஜாமினில் வெளிய வர முடியாதவாறு வாலாஜாபாத் காவல் துறையினர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள தம்பதிகளை தேடி வருகின்றார்கள்.
மேலும் மணிகண்டனுடைய அராஜகப் போக்கினால் இவருடைய மனைவி சாவித்திரி அவர்கள் மீது 205 கீழ் வழக்கு பதிவு செய்து திட்ட இயக்குனர் ஸ்ரீப்ரியா அவர்கள் உத்தரவு இட்டுள்ளார். அதன்படி திமுக கட்சி சேர்ந்த ஊராட்சி மன்ற பெண் தலைவர் சாவித்திரி அவர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு, எந்த திட்டங்களுக்கும் காசோலை வழங்குவோ, எந்த திட்டங்களையும் செயல்படுத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாலாஜாபாத் காவல்நிலையத்தில் டிஎல் .மணிகண்டன் மீது மட்டுமே 3 எஃப் ஐ ஆர் , 10க்கும் மேற்பட்ட சிஎஸ்ஆர் என வழக்குகள் பதிவாகியுள்ளது.
இதைப் பற்றி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் யோகி அவர்கள் கூறும் போது, மணிகண்டன் தப்பான வழியில் இந்த ஊராட்சி நிர்வாகத்தை கைப்பற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்து வருகின்றார். ஊத்துக்காடு கோவிலிலும் முறைகேடு நடந்துள்ளது. மணிகண்டன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி ஆகியவர்களால், இந்த ஊராட்சிக்கு மிகுந்த கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. இதை மாவட்ட நிர்வாகம் தான் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த ஊரின் மானத்தை காப்பாற்ற வேண்டும் என ஆதங்கத்துடன் வேண்டுகோள் வைத்தார்.
அதேபோல் கடந்த நிதியாண்டில் தமிழக அரசு 6 வழி சாலையை ஒட்டி உள்ள ஊத்துக்காடு ஊராட்சியில் எஸ்டி பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்ட 3.46 சென்ட் இடத்தை அவர்களுக்கு அளிக்கக்கூடாது. அவர்கள் வந்து இங்கு குடியேறினால் பிற்காலத்தில் நமது சமுதாயம் அவர்களிடம் கைகட்டி நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும், எனவே அனைத்து மக்களும் ஒன்றாக சேர்ந்து அரசாங்கத்தை எதிர்ப்போம் , எஸ்டி மக்களை இங்கு வரவிடாமல் தடுப்போம் என எஸ்டி மக்களுக்கு எதிராக மக்களைத் திரட்டி திமுக கட்சியின் பிரதிநிதி டிஎல்.மணிகண்டன் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் அப்போது மிகவும் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.