கணினி பழுதால் ஓபி சீட் பெறுவதில் சிக்கல்… நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலம் ; காஞ்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி

Author: Babu Lakshmanan
17 January 2024, 1:23 pm

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு ஓபி சீட் வழங்கும் பிரிவில் அவ்வப்போது கம்ப்யூட்டர்கள் வேலை செய்யாததால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 1000 முதல் 1500 வரை உள் மற்றும் புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். எழுதப் படிக்கத் தெரியாத பல்வேறு கிராம மக்களும், மொழி தெரியாத பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வட இந்தியர்களும் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு முன்னதாக உள் மற்றும் புற நோயாளிகள் பிரிவில் அனுமதி சீட்டு வாங்க வேண்டும்.

ஓபி சீட் வழங்கும் பிரிவு 24 மணி நேரமும் செயல்படும். இங்கு மூன்று கணினிகள் உள்ளது. சிகிச்சை பெற வருபவர்கள் அவர்களின் பெயர், வயது, செல்பேசி எண் ஆகியவற்றை தெரிவித்தால் இணையதளம் மூலம் கம்ப்யூட்டரில் பதிவு செய்து பிரிண்ட் எடுத்து உடனுக்குடன் ஓபி சீட் வழங்குவார்கள்.

அதேபோல, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கும் இங்குதான் அட்மிஷன் சீட்டும் வழங்கப்படும். இந்த பிரிவில் உள்ள மூன்று கம்ப்யூட்டர்களும் அவ்வப்போது இணையதள பிரச்சனையால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதனால், மருத்துவமனைக்கு வருகின்ற உள் மற்றும் புற நோயாளிகள் ஓபி சீட்டு வாங்குவதற்காக பல மணி நேரம் காத்திருந்து ஓபி சீட் வாங்கும் நிலை உள்ளது .

அதேபோல், ஆன்லைனில் தரப்படும் ஓபி சீட்டில் ஐபி எண் (IP NUMBER + CODE NUMBER ) ஒன்று இருக்கும். வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களோ, வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களோ தொடர் சிகிச்சை பெற வேண்டுமெனில், தேசத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும் “ஆன்லைன் ஓபி சீட்டை” காண்பித்தால் அதனுடைய ஐபி நம்பர் வழியாக நோயாளிகளின் மருத்துவ குறிப்புகளை எடுத்து அதற்கு ஏற்றார் போல் தொடர் சிகிச்சை பெற முடியும்.

தற்போது கையினால் எழுதி தரப்படும் ஓபி சீட்டுகளால் அப்படிப்பட்ட தொடர் சிகிச்சை பெறுவதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாளொன்றுக்கு 1000 வரை உள் மட்டும் புற நோயாளிகள் என கணக்கிட்டால் மாதம் குறைந்தபட்சம் 30,000 முதல் 50,000 ஆயிரம் நோயாளிகள் வந்து செல்கின்றனர். நோயாளிகளின் தகவல்கள் எதுவும் ஆன்லைனில் பதிவு செய்ய முடியாததால் மருந்து மாத்திரைகள் வழங்குவதிலும், பெறுவதிலும், அரசாங்கத்துக்கு கணக்கு காண்பிக்க முடியாத சிக்கல் உள்ளது எனவும் , இதனால் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது.

அதேபோல் “சாதாரண பேப்பரில் அரசு தலைமை மருத்துவமனை என ரப்பர் ஸ்டாம்ப் சீல் அடித்து தருகின்றனர். அதிலேயும் இங்க் இல்லாத அவல நிலை உள்ளது”.

எனவே உடனடியாக உள் மற்றும் புற நோயாளர்களுக்கு வழங்கப்படும் அனுமதி சீட்டுகளை ஆன்லைன் மூலமாக வழங்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நோயாளிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் பட்டு சேலை உற்பத்தியிலும், அதிக தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டமாகவும் பெரும் வளர்ச்சி பெற்று வருகின்றது. மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், ஓரகடம், இருங்காடு கோட்டை, படப்பை ,வாலாஜாபாத், வல்லம் வடக்கால் போன்ற பகுதிகளில் லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் காஞ்சிபுரம் மாநகரில் வீடு எடுத்து தங்கி தொழிற்சாலைகளுக்கு சென்று வருகின்றார்கள்.

ஜார்கண்ட், பீகார், சட்டிஸ்கர், பாட்னா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சிக்கிம், அருணாச்சல் பிரதேஷ் , கொல்கத்தா போன்ற பல மாநிலங்களை சேர்ந்த வெளிமாநில ஆண், பெண் தொழிலாளர்கள் உடல் நலம் பாதிக்கப்படும்போது, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் தங்கள் ஊருக்கு சென்று அங்கு தொடர் சிகிச்சை பெற முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு தலைமை மருத்துவமனையில் கண்காணிப்பாளராக பணிபுரியும் பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் கோபிநாத் ஆகியோர்கள் இதுபோன்ற பிரச்சனைகளை சற்று கூட கவனிக்காமல் உள்ளது மிகவும் வேதனைக்குரியது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 300

    0

    0