மாப் குச்சியில் குளுக்கோஸ் பாட்டிலை தொங்கவிட்டு நோயாளிக்கு சிகிச்சை… காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவலம்

Author: Babu Lakshmanan
11 ஜனவரி 2024, 2:53 மணி
Quick Share

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவனையில் மாப் குச்சி கொண்டு குளுக்கோஸ் பாட்டில் தொங்கவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துமனையில் நாள்தோறும் சுமார் 1000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். காஞ்சிபுரத்தைத் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி அருகாமையில் உள்ள திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, பிரசவ பிரிவு, நுண்கதிர் பிரிவு, பச்சிளம் குழந்தைகள் பிரிவு, இயன்முறை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. காய்ச்சலுக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டு என தனி தனி வார்டுகள் உள்ளன. காய்ச்சலுக்கான ஆண்கள் வார்டில் 10 படுக்கைகளும், பெண்கள் வார்டில் 12 படுக்கைகளும் மட்டுமே உள்ளன.

இதனால் வைரல் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் மற்றும் கொரோனா தொடர்பான காய்ச்சல் என வருபவர்களுக்கு , டெங்குக்கான வார்டோ, கொரோனா தொற்றுக்கான தனிப்பிரிவோ இல்லாததால், அந்த நோயாளிகளை பொது வார்டில் வைத்து சிசிச்சை அளிக்கும் நிலை உள்ளது. இதனால் பொது வார்டில் இருப்பவர்களுக்கு காய்ச்சல் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது.

மேலும், இந்த காய்ச்சலுக்கான வார்டுகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இந்த காய்சலுக்கான வார்டில் உள்ள படுக்கைக்கு அருகே “குளுக்கோஸ் ஏற்றுவதற்குரிய தனி ஸ்டேண்ட்” பொருத்தாமல் , தரையை பெருக்க உபயோகப்படுத்தும் துடைப்பத்தின் (தரையை துடைக்கக் பயன்படுத்தும் மாஃப்) அடிக்குச்சியை கட்டிலுடன் சேர்த்து கம்பி வைத்து கட்டி ஸ்டாண்டாக பயன்படுத்தி குளுக்கோஸ் ஏற்றப்படும் அவல நிலை உள்ளது. மேலும், சில இடங்களில் சுவிட்சுகள் பெயர்ந்து தொங்கிய நிலையில் உள்ளதால் நோயாளிகள் மீது மின்சாரம் பாயும் அபாயமும் உள்ளது.

சமீப நாட்களாக மருத்துவனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் பலர் கடுமையான காய்ச்சலுடன் வருகின்றனர். இவர்களில் பலருக்கு உள்நோயாளிகளாக தங்க வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் காய்ச்ச்சல் வார்டில் படுக்கை இல்லாமல் பொது வார்டில் அனுமதிக்கப்படுவதால் பொது வார்டுக்கு வரும் இதய நோயாளிகள், சிறுநீரகப் பிரச்சினையுடன் வரும் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாவதாக இங்கு வரும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சல் முகாமில் போதிய உபகரணங்கள் இன்றி அனுமதிக்கப்படும் நபர்களுக் குளுக்கோஸ் பாட்டில் தொங்க விடுவதற்கு உபகரணங்கள் இன்றி தரை துடைப்பான் குச்சி கொண்டு குளுக்கோஸ் பாட்டில் ஏற்றப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.

  • KASTHURI மேடை முதல் மன்னிப்பு வரை.. கஸ்தூரி விவகாரத்தில் நடந்தது என்ன?
  • Views: - 367

    0

    0