‘பணத்தை கொடுத்து தம்பிய கூட்டிட்டு போ’.. அண்ணன் கண்முன்னே தம்பியை தூக்கிச் சென்ற ஓனர்… காஞ்சி பேருந்து நிலையத்தில் பரபரப்பு

Author: Babu Lakshmanan
1 மார்ச் 2023, 12:11 மணி
Quick Share

காஞ்சிபுரம் ; 1 லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு உன் தம்பியை அழைத்து செல் என கூறி, சொந்த ஊருக்கு செல்ல பேருந்தில் அமர்ந்து இருந்த அண்ணன் கண்முன்னே , 12 வயது சிறுவனை, தூக்கி சென்ற உரிமையாளரால் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவில்கள் நிறைந்த மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் சுற்றுலாப் பயணிகளும், திருமணத்துக்காக பட்டு சேலை வாங்க வருபவர்களும் என மக்கள் நடமாட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதுவும் இரவு 10 மணி வரை பயணிகள், பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் பேருந்து நிலையத்தில் அலைமோதும்.

இந்நிலையில் நேற்று மாலை பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் அமைந்துள்ள இடத்தில் தன்னுடைய 12 வயது தம்பியுடன், திண்டுக்கல் செல்ல ராஜபாண்டி (18) பேருந்தில் அமர்ந்து இருந்தார்.

அப்போது, ஒரு பைக்கில் வந்த சுமார் 35 வயது உடைய நபர் ஒருவர் ராஜபாண்டி வைத்திருந்த செல்போனை பறித்துக் கொண்டு, ஒரு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு உன் தம்பியை அழைத்து செல் எனக்கூறி, கௌசிக்கை வலுக்கட்டாயமாக இழுத்து தன்னுடைய பைக்கில் அமர வைத்து சிட்டாக பறந்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ராஜபாண்டி, தன் தம்பியை தூக்கிக் கொண்டு செல்கின்றார்கள் என கூக்குரலிடவே, ஆவின் பாலகம் அருகே ஏராளமான மக்கள் குவிந்துவிட்டனர். கௌசிக்கை தூக்கி சென்ற நபரை பிடிக்க சிலர் முயற்சித்தும் முடியவில்லை.

ராஜபாண்டியிடம் இது தொடர்பாக கேட்டபோது அவர் கூறியதாவது ;- தன்னுடைய சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை. தந்தை விஜயகுமார் , அம்மா பாண்டியம்மாள், தம்பிகள் சந்தோஷ் , கௌஷிக் , தங்கைகள் உமேஷ்வரி, மௌசிகா என எங்களுடைய குடும்பம் பெரியது. அதனால் நான் பத்தாவது படித்துவிட்டு மூன்று வருடம் முன்பு காஞ்சிபுரம் அடுத்துள்ள காரை பகுதியில் மிக்சர், காராசேவ் போன்ற ஸ்னாக்ஸ் ஐட்டங்கள் உற்பத்தி செய்யும் இளையராஜா என்பவரிடம் வேலைக்கு சேர்ந்தேன்.

என்னுடைய பெற்றோர்கள் இளையராஜாவிடம் வாங்கிய கடனை என்னுடைய சம்பளத்தில் கழித்து விட்டார்கள். இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு 12 வயதான என்னுடைய தம்பியை அழைத்து வந்து வேலைக்கு சேர்த்துக் கொண்டார். என்னை போல் என் தம்பியும் கஷ்டப்படக் கூடாது என எண்ணினேன். மேலும், என் தம்பி ஏழாம் வகுப்பு படித்துள்ளார். மேற்கொண்டு படிக்க வைக்க எண்ணி இன்று ஓனருக்கு தெரியாமல் நானும், என் தம்பியும் கிளம்பி பஸ் ஸ்டாண்டுக்கு வந்து திண்டுக்கல் செல்ல பேருந்தில் அமர்ந்திருந்தபோது, இளையராஜா என்னுடைய தம்பியை தூக்கி சென்று விட்டார், என அழுது கொண்டே கூறினார்.

பேருந்து நிலையத்துக்கு உள்ளே பணம் கேட்டு ஒரு சிறுவனை கடத்தி விட்டார்கள் என வதந்தி வேகமாக பரவிய நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த சிவகாஞ்சி காவல்துறையினர் ராஜபாண்டியை அழைத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றனர். பின்னர் இளையராஜாவுக்கு போன் செய்து அந்த சிறுவனை அழைத்துக் கொண்டு வா என காவல்துறையினர் உத்தரவிட்டதின் பேரில், தன்னுடைய ஆதரவாளர்கள் 10 பேருடன் சிறுவனை அழைத்துக் கொண்டு இளையராஜா காவல் நிலையம் வந்தார்.

காவல் நிலையத்தில் வைத்து சைல்ட் ஹெல்ப் லைன், குழந்தைகள் கடத்தல் & பாதுகாப்பு துறையினர், உளவுத்துறையினர் ஆகியோர் இளையராஜா உள்ளிட்ட அனைவரிடமும் கிடுக்கு பிடி விசாரணை செய்தனர். பின்ன ராஜபாண்டி மற்றும் அவரது தம்பியை செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியில் உள்ள அரசு காப்பகத்திற்க்கு கொண்டு சென்றனர்.

இரண்டொரு நாளில் ராஜபாண்டி மற்றும் அவரது தம்பியிடம் சகோதரர்களிடம் குழந்தைகள் நல குழுமம் குழுவினர் விசாரணை செய்து, சிறுவனை யாரிடம் அனுப்பி வைப்பது என முடிவு செய்வார்கள். அதன் பின்னர் இளையராஜா உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இது தொடர்பாக காரை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, ஜெயஜோதி மற்றும் கனீஸ் என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி அதில் மிக்சர், காரா சேவ் போன்ற ஏராளமான ஸ்னாக்ஸ் வகைகளை உற்பத்தி செய்து, பல மாவட்டங்களுக்கு இளையராஜா விற்பனை செய்து வருவதாகவும், அதில் ஏராளமான சிறுவர்கள் வேலை செய்வதாகவும் தெரிவித்தனர்.

மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பேருந்து நிலையத்தில் உள்ளே ஒரு சிறுவனை தரதரவென இழுத்து பைக்கில் தூக்கிக் கொண்டு சென்ற சம்பவம் காஞ்சிபுரம் நகரில் மிகுந்த பரபரப்பை உண்டாக்கியது.

இந்த சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 30 மீட்டர் தூரத்தில்தான் கண்காணிப்பு கேமராக்களுடன் புதியதாக அமைக்கப்பட்ட போலீஸ் பூத் உள்ளது. சம்பவம் நடந்து மூன்று மணி நேரமாகியும், ஒரு காவலர் கூட சம்பவ இடத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • Thiruma அந்த நிகழ்ச்சிக்கு விஜய் வந்தால் நான் கலந்து கொள்வது சந்தேகம்தான்.. திருமாவளவன் ஓபன் டாக்!
  • Views: - 538

    0

    0