‘மின்கட்டணமும் பலமடங்கு ஏறிடுச்சு’.. தெருவிளக்கையும் இப்படி அணைத்து வைக்கலாமா..? குமுறும் மக்கள்.. கண்டும் காணாத திமுக கவுன்சிலர்கள்…!!

Author: Babu Lakshmanan
3 March 2023, 8:57 pm

காஞ்சிபுரம் : பல மடங்கு வீட்டு மின் கட்டணத்தை ஏற்றிவிட்டு தெரு மின்விளக்குகளை அணைத்து வைப்பதா..? என காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு மக்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் உள்ள தெரு மின் விளக்குகளை பராமரிக்க மாநகராட்சி தனியார் நபரிடம் ஒப்படைத்துள்ளது. மாநகராட்சியின் ஊழியர்கள் எவ்வளவு மெத்தனமாக இருப்பார்களோ, அதே போலவே மின் விளக்குகளை பராமரிக்கும் நபர்களும் அலட்சியமாகவே செயல்படுவதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

அதற்கு எடுத்துக்காட்டாக காஞ்சிபுரம் நகரின் முதல் வார்டுக்கு உட்பட்ட, முக்கிய நுழைவாயிலான பஞ்சுப்பேட்டை பெரிய தெரு பகுதியில் உள்ள ஒரு தெரு மின் விளக்கை கம்பியை வைத்து மின்கம்பத்தில் கட்டி உள்ளனர். இந்த வழியே செல்லும் கன ரக வாகனங்கள் விளக்கின் மீது பட்டு 360 டிகிரி கோணத்தில் மின்விளக்கு சுற்றி சுற்றி வருகின்ற நிலையும் அவ்வப்போது ஏற்படும். அதனால் பல்ப்பும் அவ்வப்போது பழுதாகின்றது.

இந்த சாலை மெயின் ரோடுக்கு துணை சாலையாக செல்கின்றது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் செல்லும் இந்த சாலையில் ஒரு வீட்டின் உரிமையாளரிடம் லஞ்ச பணத்தை பெற்று கொண்ட மின்வாரிய அலுவலர்கள், சற்றுகூட மனசாட்சி இல்லாமல் சாலையின் வரையறை கோட்டிலிருந்து சாலையின் உள் பகுதியில் 4 அடி தூரத்தில் மின்கம்பத்தை அமைத்துள்ளனர்.

இதனால் இந்த வழியே செல்கின்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள் விபத்தில் சிக்குமோ என்று அச்சம் பொதுமக்களிடம் நிலவி வருகின்றது. அதேபோல் கம்பியில் கட்டி வைக்கப்பட்டுள்ள மின்விளக்கும் எப்போது விழுமோ என்ற நிலையும் அவ்வப்போது ஏற்படுகின்றது.

இந்நிலையில் மக்களின் வரிப்பணத்தால் நிர்வாகம் செய்யும் தமிழக அரசு, வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படுகின்ற மின் கட்டணத்தை பல மடங்கு கூட்டி விட்டதாகவும், அதேசமயம் தெருவிளக்குகளை அவ்வப்போது சுமார் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் என கணக்கில்லாமல் அணைத்து விடுவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

காஞ்சிபுரம் நகரில் அதிக மக்கள் தொகை கொண்ட 1வது வார்டு மற்றும் 2வது வார்டு பகுதியில் உள்ள சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் அவ்வப்போது அணைக்கப்படுவதால் குற்ற செயல்கள் அதிகம் நடக்க வாய்ப்பு உள்ளது என பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த இரண்டு வார்டுகளுமே திமுக வசம் உள்ளது. மாமன்ற உறுப்பினர்கள் எதையுமே கண்டுகொள்வதில்லை. மாமன்றத்தில் மாதாந்திர கூட்டத்தில் கொடுக்கப்படும் கமிஷனை மட்டும் பயபக்தியுடன் வாங்கிக் கொள்கின்றனர் என பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தெரு விளக்குகள் எரியாததை பயன்படுத்தி ரேஷன் அரிசி கடத்தல், கஞ்சா மற்றும் கள்ள சாராயம் விற்பனை, போன்ற சமூக விரோத செயல்கள் மிக எளிதாக நடைபெறுகின்றது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu