கோவிலில் பெண் ஊழியரிடம் பாலியல் சீண்டல்… லீக்கான வீடியோ ; கோவில் செயல் அலுவலர் மீது பாய்ந்த ஆக்ஷன்..!!
Author: Babu Lakshmanan27 ஜனவரி 2023, 2:09 மணி
காஞ்சிபுரத்தில் பிரபல கோவிலில் அமைந்துள்ள அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியரிடம், கோவிலின் செயல் அலுவலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து செயல் அலுவலர் திருச்செந்தூருக்கு அயற்பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்குவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில். இக்கோவிலின் செயல் அலுவலராக பணிபுரிந்து வரும் வேதமூர்த்தி என்பவர் உடன் பணிபுரியும் பெண் ஊழியரை பட்ட பகலில் அலுவலகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ சமுக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியது.
அந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக புகார் கொடுக்காததால், அந்த செயல் அலுவலர் மீது காவல்துறையும், அறநிலையத்துறையும் நடவடிக்கை எடுக்காமல் கண்மூடி இருந்து வருகிறது. இதுவும் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெண்கள் தொடர்பாகவோ, அரசுக்கு எதிராகவோ சமூக வலைதளங்களில் செய்தியோ, வீடியோவோ வெளியிட்டால் உடடினயாக கைது செய்ய பறந்த வரும் தமிழக காவல்துறை, கோவிலுக்குள்ளேயே ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் வகையில், அநாகரிக செயலில் ஈடுபட்ட செயல் அலுவலர் வேதமூர்த்தியை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பலர் சமூக வலைதளங்களில் வலியுறுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் செயல் அலுவலர் வேத மூர்த்தி, ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்டத்தில் பணிபுரிந்த போது இதே போன்று சர்ச்சையில் சிக்கினார். மேலும், இவர் பணிபுரியும் திருக்கோயில்களில் எப்போதுமே இவர் மீது அதிக அளவில் குற்றம் சாட்டப்படுவது வழக்கமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
மிகவும் பிரசித்து பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பல விலை உயர்ந்த பஞ்சலோக சிலைகள் காணாமல் போனது என்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சிவன் சொத்து கொடை நாசம் என்பதற்கு ஏதுவாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகபாபு, இது போன்ற பாலியல் சீண்டல் நடவடிக்கைகளை கண்டும் காணாமல் உள்ள காரணத்தினால், பக்தர்கள் அனைவரும் சேர்ந்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இந்தக் கோவிலின் செயல் அலுவலராக பணிபுரிந்த வேதமூர்த்தி திருச்செந்தூர் சுப்பிரமணிய திருக்கோவிலுக்கு அயல்பணிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் .
தமிழ்நாடு குடிமைப் பணி விதிகளில் விதி எண் 8ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை வேதமூர்த்தி செய்தால் விதி 14ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் குமரகுருபரன் சார்பில் கண்காணிப்பாளர் நோட்டீஸ் வழங்கி உள்ளார். பிரசித்தி பெற்ற புனிதமான கோயில்களில் கூட இது போன்ற ஆட்களை நியமனம் செய்கின்றார்களே என பக்தர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் ஆதி கேசவ பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி அவர்கள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலுக்கு செயல் அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
0
0