பட்டப்பகலில் டிராவல்ஸ் உரிமையாளர் வெட்டிப் படுகொலை… நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கிய இளைஞர்கள்…!

Author: Babu Lakshmanan
12 July 2023, 8:25 am

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளர் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி 49வது வார்டு ஓரிக்கை அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் பூபாலன். சொந்தமாக கார் வைத்துக் கொண்டு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். பூபாலன் தனது குழந்தையை பள்ளியில் விட்டு விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்த போது, எதிரே பைக்கில் வந்த 4 மர்ம நபர்கள் பூபாலனின் பைக்கை வழி மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பூபாலனை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பூபாலன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேல் சிகிச்சைக்கு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பூபாலன் அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார்.

இது தொடர்பாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தது, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மந்தவெளி பகுதியை சேர்ந்த மோகன் என்ற இளைஞனை கொலை செய்த வழக்கில் பூபாலன் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு சிறைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. அந்தக் கொலைக்கு பழி வாங்கும் நோக்கத்தில் கஞ்சா போதைக்கு அடிமையான, நான்கு இளைஞர்கள் திட்டமிட்டு பூபாலன் பைக்கில் வீட்டுக்கு வரும் போது பட்டப் பகலில் பட்டாக் கத்தியால் வெட்டிவிட்டு தப்பினர்.

கஞ்சா போதையில் பூபாலனை கத்தியால் வெட்டும்போது செல்வத்துக்கும் வலது கை விரல்களில் வெட்டு விழுந்தது. முக்கிய குற்றவாளியான செல்வத்தை காவல்துறையினர் கைது செய்து காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினர் பாதுகாப்பில் உள்ளனர்.

ஓரிக்கை மந்தவெளி பகுதியை சேர்ந்த செல்வத்தின் மீது ஏற்கனவே இரண்டு கொலை வழக்குகள் உட்பட ஆறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதேபோல் தப்பி ஓடி தலைமறைவாக இருக்கும் மதன், பாலாஜி, நசீர் போன்ற குற்றவாளிகளை தனிப்படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எந்த குற்ற சம்பவங்கள் நடந்தாலும் அது வெளியே தெரியக்கூடாது என்பதில் காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் முதல் அனைத்து காவலர்களும் முழு மூச்சுடன் பணி புரிவதாகவும், ஏற்கனவே நடந்த திருட்டு, வழிப்பறி, கொள்ளை போன்ற வழக்குகளில் இதுவரை எந்தவித தீர்வும் காணப்படவில்லை என்று அப்பகுதியினர் குற்றம்சாட்டுகின்றனர்.

அதிலேயும் தாலுக்கா காவல் ஆய்வாளர் பேஸில் பிரேம் ஆனந்த் என்பவர் கையூட்டு பெறுவதில் மட்டுமே கவனமாக உள்ளதாகவும், எந்த விதமான வழக்குகளிலும் தீர்வு காணப்படவில்லை எனவும், இவருக்கு பணியிட மாற்றம் வந்து இரண்டு மாதங்கள் ஆகின்றது. அதனால் தானோ எந்த வழக்குகளிலும் முன்னேற்றம் காணப்படாமல் உள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். ஏதாவது கேட்டால் விருப்பம் இல்லாமல் நான் இங்கே பணிபுரிகின்றேன் என கூறி வருவதால் பாதிக்கப்பட்ட பலர் நமக்கு தீர்வே கிடைக்காதா என ஏங்கி வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 387

    0

    0