சாலையில் வைத்து பட்டதாரி இளைஞர் வெட்டிப்படுகொலை ; நண்பனை சந்திக்க சென்ற போது நிகழ்ந்த சோகம்… மகன் கைது.. தந்தை தலைமறைவு..!!
Author: Babu Lakshmanan22 March 2023, 2:28 pm
சின்ன காஞ்சிபுரம் அருகே 23 வயது உடைய டிப்ளமோ பட்டதாரி இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தாலுக்கா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சதாவரம் பகுதியில் 23 வயது உடைய ஒரு இளைஞர் கத்தியால் படு பயங்கரமாக தாக்கப்பட்டார் என்ற தகவல் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், கத்தியால் வெட்டப்பட்டு இறந்தவர் சின்ன காஞ்சிபுரம் ஆனந்தன் தெருவை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் தமிழ்வாணன் (வயது 23) என்பதும் , டிப்ளமோ படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதும் தெரியவந்தது.
சதாவரத்தில் உள்ள தன்னுடைய நண்பர் தினகரன் என்பவரை சந்திப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்ற போது, பல வழக்குகளில் தொடர்புடைய காந்திநகர் பகுதியை சேர்ந்த ரவுடி குணசேகர் மற்றும் குணசேகரின் தந்தை ரகு ஆகிய இரண்டு பேர் சேர்ந்து தமிழ்வாணனை கண்டம் துண்டமாக கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த தமிழ்வாணனை மீட்டு 108 வாகனத்தின் மூலம் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதல் உதவி சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தபோதே சிகிச்சை பலனின்றி தமிழ்வாணன் உயிரிழந்தார். குணா என்ற குணசேகர் தப்பி ஓடிய நிலையில் அவருடைய தந்தை ரகு காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமாக தாலுக்கா காவல்துறையினர் மற்றும் மாவட்ட தனிப்படையினர் தீவிரமான விசாரணை செய்து வருகின்றார்கள். ஏற்கனவே ரகு மற்றும் குணசேகர் மீது நான்குக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரின் அலட்சியப் போக்கு காரணமாக தான் இந்த கொலை நடந்தேறி உள்ளது.
ஏற்கனவே இந்தப் பகுதியில் சமூக விரோத செயல்கள் அதிகம் நடைபெறுவதாக தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார் வந்த வண்ணம் இருந்த நிலையில், கஞ்சா மற்றும் கள்ள சந்தையில் மதுபானம் இந்த பகுதியில் அமோகமாக நடந்தேறி வருவதின் காரணமாக, இந்தப் பகுதியில் கொலை நடக்க வாய்ப்பு உள்ளது என கடந்த ஒரு மாதம் முன்பே அப்பகுதியில் உள்ள மக்கள் பேசியதை காவல்துறையின் தனிப்பிரிவு ஏன் கண்டுகொள்ளவில்லை என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.