நள்ளிரவில் மனைவி வீடு திரும்புவதில் தாமதம் ; இரு பெண் குழந்தைகளை தீவைத்து கொளுத்திய தந்தை… விசாரணையில் பகீர்!!

Author: Babu Lakshmanan
13 April 2023, 1:36 pm

கன்னியாகுமரி அருகே இரு பெண்குழந்தைகளை தீவைத்து விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் பரசேரி ராஜகோபால் தெருபகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி அனிதா. இந்த தம்பதியருக்கு 11வயதில் தன்ஷிகா, 9 வயதில் சுஷ்மிகா என்ற இரு பெண் குழந்தைகள் உண்டு. எலக்ட்ரிசன் வேலை பார்த்து வரும் நாகராஜன் குடிபோதைக்கு அடிமையானதால், குடும்பம் வறுமையில் தத்தளித்து வருகிறது.

இதனால், வாழ்வாதாரத்திற்காகவும், இரு குழந்தைகளையும் படிக்க வைக்கவும் வேண்டி மனைவி அனிதா அருகில் உள்ள பேக்கரி கடையில் வேலைக்கு சென்று வருகிறார்.

பேக்கரி கடையில் வேலை பார்க்கும் அனிதா நேற்றிரவு திருமண நிகழ்ச்சி ஒன்றிற்கு கடையில் போளி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததால் வீட்டிற்கு வர தாமதமாகியுள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த நாகராஜன், மனைவி வீட்டில் இல்லாத நிலையில் தனது இரு குழந்தைகளும் கட்டிலுக்கு அடியில் தூங்கி கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

குடிபோதையில் இருந்த நாகராஜன் மனைவி வீட்டில் இல்லாத ஆத்திரத்தில் வீட்டை பூட்டி விட்டு கட்டிலுக்கு அடியில் தூங்கி கொண்டிருந்த தனது இரு குழந்தைகள் மீதும், பீரோவில் இருந்த புடவை மற்றும் ஆடைகளை குழந்தைகள் மீது தூக்கி போட்டு தீ வைத்து கொளுத்தியதோடு, தானும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில், குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த பார்த்த போது, வீட்டின் முன்பக்க கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, நாகராஜன் உடல் முழுவதும் கருகி உயிரிழந்த நிலையிலும், இரு குழந்தைகளும் உடல் கருகி உயிருக்கு போராடிய நிலையில் காணப்பட்டனர்.

இதனையடுத்து, உடனடியாக இரு குழந்தைகளையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் குழந்தைகளை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இரு குழந்தைகளும் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரணியல் போலீசார் நாகராஜன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

குடிபோதையில் தந்தை இரு குழந்தைகளை தீ வைத்து கொளுத்தி விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…