தரமில்லா கம்பி… குளச்சல் பேருந்து நிலைய கட்டுமானத்தில் முறைகேடு ; வீடியோ வெளியிட்ட சமூக ஆர்வலர்..!!

Author: Babu Lakshmanan
28 June 2023, 9:30 am

கன்னியாகுமரி மாவட்டத்தில் 5-கோடி ருபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படும் குளச்சல் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தரைதளம் அமைக்கும் முதல்கட்ட பணிகளிலேயே தரமற்ற கம்பிகளை பயன்படுத்தி ஒப்பந்ததாரர் கட்டுமான பணிகளை மேற்கொள்வதாக சமூக ஆர்வலர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பழமையான நகராட்சியில் குளச்சல் நகராட்சியும் ஒன்று இந்த நகராட்சி அலுவலகத்தின் அருகாமையிலேயே குளச்சல் பேருந்து நிலையமும் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலைய கட்டிடத்தை அகற்றி விட்டு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மற்றும் கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது பேருந்து நிலைய கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பேருந்து நிலைய கட்டிட வரைபடம் மற்றும் கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் பொருட்களின் அளவுகள் குறித்த “லே அவுட்”, கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் பொது வெளியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படாத நிலையில், கட்டுமானத்தின் தரம் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், ஜெயன் என்ற சமூக ஆர்வலர் குளச்சல் பேருந்து நிலைய கட்டுமானத்தில் தரமற்ற கம்பிகள் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். முதற்கட்ட பணியிலேயே ஒப்பந்ததாரர் தரமற்ற கம்பிகளை பயன்படுத்தினால் கட்டிடத்தின் உறுதி தன்மை எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பிய அவர், இந்த வேலையை நிறுத்தி ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இது குறித்து குளச்சல் நகராட்சி பொறியாளர் ஜெயந்தி அவர்களை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது பதிலளிக்க மறுத்து விட்டார்.

  • ajith talks about pahalgam terror attack நமக்குள்ளயே சண்டை போட்டுக்காதீங்க- பஹல்காம் தாக்குதல்; அஜித் கொடுத்த பதிலடி…